தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் துறையின் ஆணையர் கே.எஸ்.பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
சளி, இருமல், மூச்சு பிரச்னைகள் இருக்கக் கூடிய நபர்களை நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்த கூடாது. மேலும், இதயம் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு பயன்படுத்த கூடாது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வெத்தலை, பாக்கு, புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பணியிடங்களுக்கு வரக்கூடாது. வேலை பார்ப்பவர்களுக்கு இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பணியிடங்களில் கை கழுவும் வசதி, சோப்பு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். 100 நாள் பணியில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா வந்திருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட இடத்தில் பணி நிறுத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை சிறு சிறு குழுக்களாக (5 முதல் 10 பேர் வரை) வேலையில் அமர்த்த வேண்டும். வேலையாட்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை மற்றவர்களுடன் பரிமாறக் கூடாது. முக்கியமாக 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களை 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.