சென்னை, பூக்கடை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் பிளாட்பாரத்தில் தங்கி, பட்டுக்கோட்டையை சேர்ந்த நிர்மல், வ/27, த/பெ.தங்கவேல் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30.11.2025 அன்று இரவு, இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 1 பெண் உட்பட 3 நபர்கள், நிர்மலிடம் தகாத வார்த்தைகள் பேசி, பணம் கேட்டுள்ளனர். நிர்மல் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி, நிர்மல் வைத்திருந்த ஆதார் கார்டு அடங்கிய பர்ஸை பறித்துக் கொண்டு, மூவரும் தப்பிச் சென்றனர். இது குறித்து நிர்மல், C-1 பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.பரமேஸ்வரன், வ/26, செம்மஞ்சேரி, சென்னை, 2.ஜெகன், வ/26, வால்டாக்ஸ் ரோடு, பிளாட்பாரம், சென்னை மற்றும் பரமேஸ்வரனின் மனைவி 3.பிரியா, பெ/வ-23, வியாசர்பாடி, சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் ஆதார் அடங்கிய பர்ஸ் மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி பரமேஸ்வரன் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உட்பட 16 குற்ற வழக்குகளும், இவர் செம்மஞ்சேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவரது மனைவி பிரியா மீது 1 கொலை உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் (01.12.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
