தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய உடல் தகுதி தேர்வில் சந்தேகம்? நேர்மையற்றமுறையில் நடத்தப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தெதி நடைபெற்ற முதல் கட்ட எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கானோர் அடுத்த கட்டமாக உடல் தகுதி பரிசோதனைக்கு அழைக்கப்பட்டனர். 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 2 வரை பல கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இது காவல்துறையில் சேரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். ஆனால் இந்த கட்டத்தில் ஏற்பட்ட சில செயல்முறைகள். தேர்வு முறையின் நியாயத்தன்மை குறித்து தீவிர சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.
இந்த உடற்திறன் பரிசோதனையின் முக்கிய அம்சங்களில் ஒன்று உயர அளவீடு. அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உயரத்திலிருந்து சில ஒரு செ.மீ. குறைவாகவோ, சில மில்லிமீட்டர் குறைவாகவோ இருந்தாலே பலர் தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மில்லிமீட்டர் குறைவு என்பதே காரணம் என கூறப்பட்டு பலர் வெளியேற்றப்பட்டதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே தேர்வில் உயரத் தகுதியுடன் அனுமதிக்கப்பட்ட சிலர், இம்முறை தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளனர். இங்கே எழும் முதல் கேள்வி “மனிதர்களின் உயரம் ஒரு ஆண்டுக்குள் குறைந்து விடுமா? கடந்த முயற்சியில் சரியான உயரம் இருந்தவர்கள். இப்போது திடீரென குறைந்துவிட்டார்களா?” அல்லது அளவீட்டு முறைகளில் ஏதாவது மாற்றமா? இந்த முரண்பாடுகள் தேர்வாளர்களின் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் கவலைக்கிடமான விஷயம், உயரம் தொடர்பான மறுபரிசீலனைக்கு முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று கடைசியாக ரூ.15,000 கட்டணம் வரை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது. ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் அல்லது இளம்பெண், ஏற்கனவே தேர்வுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, தங்கும் வசதி, பயணம், உணவு ஆகியவற்றிற்காக போராடிய பின், மறுஅளவீடு செய்ய மேலும் பெரிய தொகை செலுத்த வேண்டிய சூழ்நிலை நீதியானதா?
அதோடு, காலை 6 மணிக்கே தேற்வுமையத்திற்கு வரும் இளைஞர்கள், மறுஅளவீட்டுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தேர்வு மையங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டதால், தொலைதூர கிராமங்களில் இருந்து வருவோர் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய கட்டாயம். பெண்களுக்கு இது இன்னும் சவாலானது. பாதுகாப்பு, உடல்நிலை, பயண வசதி ஆகியவை அனைத்தும் சேர்ந்து ஒரு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.
எழுத்துத் தேர்வுக்காக மாதக்கணக்கில் உழைத்து, தேர்ச்சி பெற்று கனவுகளை கட்டியெழுப்பிய இளைஞர்கள், ஒரு மில்லிமீட்டர் குறைவால் நிராகரிக்கப்படும்போது, அது வெறும் அளவீட்டு விஷயம் அல்ல; அது ஒரு வாழ்க்கை இலட்சியத்தின் முறிவாக மாறுகிறது. அளவீட்டு கருவிகள் மிக துல்லியமாக இருந்தால் மறு அளவீட்டில் அவசியம் ஏன், விண்ணப்பிக்கும் முன்பே ஏன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து உயரச் சான்றிதழ் கட்டாயமாக கோரப்படவில்லை? அப்படியான ஒரு நடைமுறை இருந்திருந்தால், தகுதி இல்லாதவர்கள் தொடக்கத்திலேயே விண்ணப்பிக்காமல் இருந்திருப்பார்கள். அவர்களது நேரமும், பணமும், மன ஆற்றலும் வீணாகாமல் இருந்திருக்கும்.
ஒரு மில்லிமீட்டர் வேறுபாடு உண்மையிலேயே காவல்துறையின் செயல்திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? காவலராக பணியாற்றும் திறமை என்பது உயரத்தில் மட்டும் அளக்கப்படுமா? மனவலிமை. ஒழுக்கம், உடற்திறன், சமூக பொறுப்பு உணர்வு ஆகியவை சமமாக கருதப்பட வேண்டிய அம்சங்கள் அல்லவா?
இந்த சம்பவம் ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது:
தேர்வு முறைகள் கடுமையாக இருக்கலாம்; ஆனால் அவை நியாயமாகவும். ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டாமா? கடந்த ஆண்டு தகுதியானவர், இம்முறை தகுதியற்றவர் என அறிவிக்கப்படும்போது, அது ஒரே தரநிலையா? காவல்துறை என்பது மக்கள் நம்பிக்கையின் அடையாளம். அந்த துறைக்குள் நுழையும் வாயிலே சந்தேகத்திற்குரியதாக மாறினால், பொதுமக்கள் எப்படி முழுமையான நம்பிக்கையை கொள்ள முடியும்? இளைஞர்களின் கனவுகளை மதிக்கும், தெளிவான மற்றும் முன்னெச்சரிக்கை கொண்ட தேர்வு நடைமுறைகள் அவசியமாகின்றன.
ஒரு மில்லிமீட்டர் வேறுபாடு ஒரு மனிதனின் கனவுகளை முடிவுக்கு கொண்டு செல்லக்கூடாது. மாறாக, திறமைக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கும் முறையே ஒரு நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்கும். காவலர் (Police Constable) உடற்திறன் பரிசோதனையின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பாக இளைஞர்களின் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கண்டுகொள்ளுமா தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம். இது எதிர்காலத்தில் தொடராமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
