தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், பேராவூரணி காவல்துறையினர் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, காவல்துறையினர் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளைக் கண்காணித்தனர்.
இந்தச் சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், வாகனங்களுக்கான முறையான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்கியவர்கள் எனப் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்திய பேராவூரணி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, விபத்து காலங்களில் உயிர் இழப்புகளைத் தவிர்க்க தலைக்கவசம் அணிவது எவ்வளவு அவசியமானது என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இத்தகைய திடீர் சோதனைகள் பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இதுகுறித்து காவல் ஆய்வாளர் வீர.அண்ணாதுரை கூறுகையில், ‘தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூபாய் 1,000, செல்போன் ஒட்டியபடி வாகனம் இயக்கியவர்களுக்கு ரூபாய் 5,000, சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் ரூபாய் 25,000 அபராதம், அவர்கள் பெற்றோர் மீது வழக்கு பாயும்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடைபெற்ற வாகன விபத்துகளில் சுமார் 7,000 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் கட்டாயம் வாகனத்திற்கான காப்பீடு செய்திருப்பதுடன், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்குவது அவசியம்’ என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆய்வின்போது. காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தலைமைக் காவலர்கள் ஜி.வெங்கடேசன், வெங்கட்ராமன், சரவணன், ராஜப்பிரியா, காவலர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
