மண்டகப்படி கேட்ட ஆதிதிராவிட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது திருவிழா நடத்த முயற்சி. புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி மூங்கில் ஐயனார் கோயில் விவகாரத்தில் சமூக நீதி எப்போது?
அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. தீண்டாமையை ஒழித்து சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக பல்வேறு சட்டங்களும் அமலில் உள்ளன. ஆனால் தமிழகத்தின் சில கிராமங்களில் இன்னும் கோயில் மரியாதை, மண்டகப்படி, சுவாமிக்கு மாலை அணிவிக்கும் உரிமை போன்ற அடிப்படை சமூக உரிமைகளில் கூட சாதி வேறுபாடு நீடித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் ஐயனார் கோயில் விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவில் ஒரு பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு மண்டகப்படி வழங்கப்படவில்லை. அவர்கள் கோவில் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளில் பங்கெடுத்து கருத்து கூறவும் அனுமதி மறுக்கப்பட்டது. அனைத்து முடிவுகளும் மாற்று சமூகத்தினர் எடுத்துவிட்டு, பின்னர் தகவலாக மட்டும் தெரியப்படுத்தப்படும். இதனால் எங்களுக்கும் சம உரிமை வேண்டும், தனி மண்டகப்படி வழங்க வேண்டும் என்று அந்த சமூக மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோயில் திருவிழாவை மையமாகக் கொண்டு சமூக மோதல் உருவானது.

இந்த விவகாரம் வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு சென்றது. அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சுமுகத்தேர்வு எட்டப்படாததால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை கையாண்ட இந்து சமய அறநிலையத்துறையின் பெண் அதிகாரி, பின்னர் வேறு ஒரு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அந்த கைது இந்த கோயில் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது குறித்து கிராம மக்களிடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது
இதற்கிடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே. எதிர்த்தரப்பினர் கோவில் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக தலையிட்டு வழக்கு முடிவடையும் வரை எந்த தரப்பும் தன்னிச்சையாக திருவிழா நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
இதற்கு பின்னர் எதிர்த்தரப்பு சமூகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலைக்குச் சென்றவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், அவசர தேவைக்காக பயணித்த பொதுமக்கள் என ஏராளமானோர் நீண்ட நேரம் சாலையில் சிக்கித் தவித்தனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே அனைவருக்கும் கட்டுப்பாடானது என்றும் விளக்கினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டு, போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
மண்டகப்படி ஒரு சடங்கு மட்டுமல்ல. அது சமத்துவத்தின் அடையாளம். கோவில் திருவிழாவில் மண்டகப்படி பெறுவது. சுவாமிக்கு மாலை அணிவிப்பது, மரியாதை பெறுவது போன்றவை வெறும் சடங்குகள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் சமத்துவ உரிமை, சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்துடன் தொடர்புடையவை. அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகள் நடைமுறையில் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில் நுழைவு, மண்டகப்படி, முதல் மரியாதை, தேர் வடம் பிடிக்கும் உரிமை, பொது சுடுகாடு, பொதுபாதை, குடிநீர் பயன்பாடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட சாதி வேறுபாட்டை மையமாகக் கொண்டு மோதல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும் சமூக மனநிலையில் மாற்றம் முழுமையாக ஏற்படவில்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
வளவம்பட்டி விவகாரமும் அதே கேள்வியைத்தான் எழுப்புகிறது. ஒரு சமூகம் சம உரிமை கேட்டால் அதற்கான பதில் நீதிமன்ற படிக்கட்டுகளாக மட்டும்தானா இருக்க வேண்டும்? ஒரு கோயிலில் அனைவரும் சமமாக வழிபட வேண்டும் என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை சிந்தனை கிராமங்களின் நடைமுறையில் எப்போது முழுமையாக அமல்படுத்தப்படும்?
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டரீதியான தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் உள்ளது.


தற்போதைய தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் அவர்களும் வளவம்பட்டி மூங்கில் அய்யனார் கோயில் விவகாரத்தில் நேரடியாக கவனம் செலுத்தி இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவ உரிமை பாதிக்கப்படாமல் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வழிவகை செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
