தஞ்சாவூர் மாவட்டத்தின் மிகப்பெரிய தாலுகாக்களில் ஒன்றாக விளங்குவது பட்டுக்கோட்டை தாலுகா. சுமார் 166 வருவாய் கிராமங்களை கொண்ட இந்த தாலுகாவின் நிர்வாகப் பொறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆதம்பை, ஆதிராம்பட்டினம், அதிவெட்டி, ஆலத்தூர், அணைக்காடு, ஆண்டாமி, அத்திக்கோட்டை, அவைக்கோட்டை, காசாங்காடு, தாமரங்கோட்டை, வெண்டாக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், நிலம், பட்டா, உட்பிரிவு, வாரிசு மாற்றம், வருமானச் சான்று, சாதிச் சான்று. முதியோர் உதவித்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் என ஏராளமான பணிகளுக்காக பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தையே நம்பியுள்ளனர்.
ஆனால், இந்த அலுவலகத்திற்குச் செல்லும் பொதுமக்களின் குரல் வேறொன்றைச் சொல்கிறது. ‘ஒரு கோப்பை கொடுத்தால் அது எப்போது நகரும் என்று தெரியவில்லை. மாதக்கணக்கில் அலுவலகத்தைச் சுற்றியும் பதில் கிடைப்பதில்லை’ என்பது பலரின் பொதுவான குற்றச்சாட்டு.
நிலுவையில் ஆயிரக்கணக்கான கோப்புகளா? பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு (Subdivision), நில அளவை, வாரிசு பெயர் மாற்றம், ஆன்லைன் மனுக்களின் பரிசீலனை, வருவாய் தொடர்பான பல்வேறு விண்ணப்பங்கள் என ஏராளமான கோப்புகள் நீண்ட நாட்களாக நிலுவையில் கிடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சிலர் கூறுவதன்படி, பழைய கோப்புகளைத் தேடவே பல நாட்கள் ஆகிறது. சில கோப்புகள் எங்கே உள்ளன என்பதே தெரியாமல் அதிகாரிகள் பல பிரிவுகளுக்கு அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ‘கோப்பு கிடைக்கவில்லை’, ‘வேறு பிரிவில் இருக்கும்’, ‘பிறகு வாருங்கள்’ போன்ற பதில்களே அதிகம் கிடைப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊழியர்கள் இல்லை… வேறு வழியில்லை’ என்பதே பதிலா?: பொதுமக்கள் தாமதம் குறித்து கேள்வி எழுப்பும்போது. அலுவலக ஊழியர்கள் கூறும் விளக்கம் ஒன்றுதான் என கூறப்படுகிறது. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒருவருக்கான வேலையை மற்றொருவர் செய்து வருகிறோம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பணியாளர் இல்லை.’
இது உண்மையாக இருந்தால், அது பொதுமக்களின் குற்றமல்ல. ஆனால் அதன் சுமை முழுவதும் பொதுமக்களின் தோள்களில் விழுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவில் செய்ய வேண்டிய பணியை, வேறு பிரிவில் உள்ள பணியாளர் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக ஒரு கோப்பை நகர்த்தவே பல நாட்கள் ஆகிறது. ஒரு கையொப்பத்திற்காகவே மக்கள் மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகத்திற்குள் செல்லும் பொதுமக்களின் கவனத்தை முதலில் ஈர்ப்பது, பல பிரிவுகளில் காலியாகக் காணப்படும் இருக்கைகள்தான் என்று கூறப்படுகிறது. பணியாளர் அமர வேண்டிய இருக்கைகள் காலியாக இருப்பதும், சில மேசைகளில் பணியே நடைபெறாமல் இருப்பதும், ஒரு சிலர் மட்டுமே பல பிரிவுகளின் பணிகளை ஒரே நேரத்தில் கவனித்து வருவதாகத் தோன்றுவதும், நிர்வாகத்தின் செயல்திறன் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு தாலுகா அலுவலகம் என்பது வெறும் சான்றிதழ் வழங்கும் இடம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதார முடிவுகள் எடுக்கப்படும் முக்கிய நிர்வாக மையம். அங்கு காலிப்பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்தால் அதன் பாதிப்பு நேரடியாக மக்களையே சென்றடையும்.’
பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தின் மிகப்பெரிய தாலுகாக்களில் ஒன்றாகும். நூற்றுக்கணக்கான வருவாய் கிராமங்கள், அதிக மக்கள் தொகை, தொடர்ந்து அதிகரிக்கும் ஆன்லைன் மற்றும் நேரடி மனுக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இந்த அலுவலகத்திற்கு தேவையான மனிதவளம் போதுமான அளவில் உள்ளதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அரசு சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இறுதியில் கோப்புகளை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது அலுவலக பணியாளர்கள்தான். பணியாளர்களே இல்லையெனில், டிஜிட்டல் வசதிகளால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதே மக்கள் கருத்து.
பொதுமக்கள் கேட்பது… பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் எத்தனை? அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எப்போது? நிலுவையில் உள்ள கோப்புகள் எவ்வளவு? காணாமல் போனதாகக் கூறப்படும் கோப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படுமா? பொதுமக்கள் பலமுறை அலைய வேண்டிய நிலையை முடிவுக்கு கொண்டு வர சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?
என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பணியாளர் பற்றாக்குறை’ என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தர பதிலாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் நில உரிமை, பட்டா, உட்பிரிவு, வாரிசு பதிவு. சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக அரசு அலுவலகத்தை நாடுகின்றனர். அவர்களின் நேரமும், பணமும், நம்பிக்கையும் வீணாகக் கூடாது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையும், பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள பணியாளர் பற்றாக்குறை, நிலுவைக் கோப்புகள் மற்றும் நிர்வாக செயல்தாமதம் குறித்த புகார்களை ஆய்வு செய்து, தேவையான கூடுதல் பணியாளர்களை நியமித்து, நீண்ட காலமாக காத்திருக்கும் மக்களுக்கு விரைவான தீர்வு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய பிரிவாக செயல்படுவது நிலஅளவை (Survey) பிரிவு. பட்டா உட்பிரிவு. எல்லை அளவீடு, நில எல்லை தகராறு, அரசு நில அடையாளம் காணுதல், நீதிமன்ற உத்தரவின்படி அளவீடு, பட்டா தொடர்பான ஆய்வு என பொதுமக்கள் அதிகம் நாடும் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தப் பிரிவில் பணிபுரியும் தலைமை நிலஅளவர் வெங்கடேஷ்குமார், பொதுமக்களிடம் எந்தவித லஞ்சமும் எதிர்பார்க்காமல், நேர்மையாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் பணியாற்றி வருகிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர். வேலை இருக்கிறதா? சட்டப்படி செய்ய முடியுமா?’ என்பதையே முதலில் பார்ப்பவர்: தேவையற்ற பணம் கேட்பதோ, தரகர்கள் மூலம் வேலை நடத்துவதோ இல்லை என்பதே அவரைப் பற்றிய பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஆனால், ஒரே ஒருவரின் நேர்மையும் உழைப்பும் மட்டும் போதுமானதா?
பட்டுக்கோட்டை போன்ற மிகப்பெரிய தாலுகாவில், தினமும் ஏராளமான அளவீட்டு மனுக்கள் குவிகின்றன. நில அளவீடு செய்ய களப்பணிக்குச் செல்ல வேண்டிய பிர்க்கா நிலஅளவர்கள் (Firka Surveyors) போதுமான அளவில் இல்லாததால், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மனுக்களும், புதிய மனுக்களும் சேர்ந்து தாமதம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, நில அளவீட்டிற்காக விண்ணப்பித்த விவசாயிகள், பொதுமக்கள், முதியவர்கள் என பலரும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. களப்பணிக்கு போதுமான பணியாளர்கள் இல்லாததால், ஒரு நாளில் முடிக்க வேண்டிய பணிகள் பல நாட்கள் தள்ளிப்போகின்றன எனவும் கூறப்படுகிறது.
இந்நிலை குறித்து உதவி இயக்குநர் (நிலஅளவை) வெங்கடகிருஷ்ணன் அவர்களின் கவனத்திற்கும் பலமுறை எடுத்துச் செல்லப்பட்டதாக துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும். தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில் இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அதிகாரிகள் மட்டுமல்ல; பொதுமக்களும், களப்பணியில் இருக்கும். நிலஅளவை ஊழியர்களும் கூடுதல் பணிச்சுமையால் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. நேர்மையாக பணியாற்ற விரும்பும் அதிகாரிகளின் முயற்சியும், போதிய மனிதவளம் இல்லாததால் முழுமையாக பலனளிக்க முடியாத சூழல் நிலவுவதாக பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டுக்கோட்டை தாலுகாவின் பரப்பளவு, வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை, நில அளவீட்டு மனுக்களின் அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தப் பிரிவிற்கு கூடுதல் பிர்க்கா நிலஅளவர்கள் மற்றும் தேவையான களப்பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தேவையான மனிதவளத்தை அரசு வழங்குமா? பட்டுக்கோட்டை நிலஅளவை பிரிவின் நிலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, பணியாளர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
