கலைஞரின்கனவு இல்லம் திட்டம் களங்கமின்றி தொடர தடையாக நிற்கும் கலவாணித்தனம். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மக்கள் நலத்திட்டங்களில் மிக முக்கியமானது கலைஞர் கனவு இல்லம் திட்டம். மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, குடிசையில்லா தமிழகம் என்ற இலக்குடன் செயல்படுத்தி வரும் இந்தத் திட்டம், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பை வழங்கி வருகிறது. ஒரு வீடு என்பது சுவர்கள் மட்டுமல்ல அது ஒரு குடும்பத்தின் மரியாதை. பாதுகாப்பு, எதிர்கால நம்பிக்கை.
இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் செயல்படும் திட்டத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சில மின்வாரிய அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9 கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளரிடம், மீட்டர் ரீடிங் எடுக்கும் தற்காலிக மின் குணக்காளர் மணிகண்டன் மற்றும் மின் வாரிய foreman செந்தில்குமார் சென்று. மின்சார ஸ்குவாட் அழைத்து பெரிய அபராதம் விதிப்போம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் வீடு இல்லாதவருக்கு வீடு என்பதே. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.ஆனால் வீடு கட்டும் பணியின் போது எந்த வகை நீர்வழி பயன்படுத்த வேண்டும், எந்த வகை மின் இணைப்பு கட்டாயம் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கடுமையான வழிகாட்டுதல்கள் திட்ட ஆவணங்களில் வெளிப்படையாக இல்லை.
ஒரு வீடு கட்டும்போது வெல்டிங், இரும்பு வெட்டி அமைத்தல், தச்சு வேலை, டைல் வேலை போன்றவை மின்சார கருவிகளால் மேற்கொள்ளப்படுவது சாதாரணம். இத்தகைய சூழலில் தற்காலிக மின் இணைப்பு (temporary connection) அவசியமெனில், அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு தெளிவான அறிவிப்பு வழங்கப்பட வேண்டாமா? ஒவ்வொரு பயனாளரும் அரசின் ஒவ்வொரு துறையின் நடைமுறைகளையும் தனியாக அறிந்து செயல்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒதுக்கீடுகள் BDO, மேற்பார்வையாளர் (Overseer) போன்ற துறையினரால் கண்காணிக்கப்படுகின்றன. இது தொடர்பாக B.D.O. மற்றும் பேராவூரணி AD. மின்சார நிர்வாக பணியாளர் பிரகாஷ் அவர்களிடம் விசாரிக்கையில், “மின் இணைப்புக்கான தனிப்பட்ட கட்டாய வழிகாட்டுதல் இல்லை; பயனாளியின் தேவைக்கு ஏற்ப நடைமுறை பின்பற்றப்படுகிறது” என்பதே விளக்கம். அப்படியானால் EB அதிகாரிகள் திடீரென விதிமுறைகள் பேசுவது எந்த அடிப்படையில்?
வீடு கட்டும் ஆரம்ப நிலையிலேயே மின் வாரிய விதிமுறைகள் இருந்தால், ஏன் அவை தெளிவாக அறிவிக்கப்படவில்லை? தற்காலிக மின் இணைப்பு அவசியம் என்றால், ஏன் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை? வீடு முடிவடையும் தருவாயில் திடீரென மிரட்டல் விடுப்பது, மக்கள் மனதில் சந்தேகத்தை உருவாக்குகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட மீட்டர் ரீடிங் ஊழியர் சேவை மாற்றம் போன்ற விஷயங்களில் பணம் வசூலித்து, முறையான ரசீது வழங்காமல் foremanனுடன் சேர்ந்து தனிலாபம் அடைகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பிட்ட வீட்டில் முன்பே லஞ்சம் கோரியதாகவும், அது வழங்கப்படாததால் foreman-ஐ அழைத்து அழுத்தம் கொடுத்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது ஒரு தனிநபர் தவறாக மட்டும் பார்க்க முடியாது — அது நேரடியாக அரசின் நற்பெயரையே பாதிக்கும் செயல். குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன், நேர்மையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறும் சூழல் உருவாகாமல் இருக்க, அரசு திட்டங்களில் ஈடுபடும் ஒவ்வொரு துறையும் பொறுப்புடன் நடக்க வேண்டும். சிலர் மேற்கொள்ளும் ஊழல் செயல்கள், முழு அரசின் மீது குற்றச்சாட்டு எழும்ப வழிவகுக்கிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் அதன் முக்கிய சின்னமாக திகழ்கிறது. ஆனால், சில மின்வாரிய அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் அந்த உயர்ந்த முயற்சிக்கு கரும்புள்ளி வைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழல் மற்றும் மிரட்டல் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்களா? தேர்தல் நேரத்தில் மக்களின் நம்பிக்கையை காக்க, அரசு உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டாமா?
மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றே — நல்ல திட்டங்கள் களங்கமின்றி தொடர வேண்டும். சிலர் செய்த தவறுகளால், முழு அரசின் நற்பெயர் பாதிக்கப்படக் கூடாது. “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் மக்கள் கனவுகளை நிறைவேற்றும் பாலமாகத் தொடர வேண்டும்; ஊழலின் நிழல் அதை மூடக்கூடாது.
