தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான உடனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், புதிய அரசு பதவியேற்பு உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.