புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் இம்முறை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.