புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் குறித்து பார்க்கலாம்.
சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியில் பிறந்தவர். இவர் 1992 ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐபிஎஸ் தேர்வு பெற்றவர். தேசிய பேரிடர் மேலாண்மைப் படையில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 1998 ம் ஆண்டு கோவை மாநகர காவல் துணை ஆணையாளராக பணியாற்றினார். அப்போது நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்தவர். பின்னர் 1998 ம் ஆண்டு டெல்லி திஹார் சிறையில் கமாண்டிங் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். அப்போது அந்த சிறையில் முதன் முறையாக சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்ததில் சந்தீப் ராய் ரத்தோர் முக்கியப் பங்காற்றினார்.
2000 ம் ஆண்டில் சென்னையில் போக்குவரத்து துணை ஆணையாளராக இருந்த போது, தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.இ.டி. சிக்னல்களை சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகம் செய்தவர். 2001 -2002 ம் ஆண்டுகளில் உலக அமைதிக்கான சிறப்புக் காவல் படையில் பங்கேற்று தனது சிறப்பான பணிக்காக பதக்கம் வென்றவர். 2003 ம் ஆண்டில் தமிழ்நாடு சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த போது, முத்திரைத் தாள் மோசடி வழக்கை விசாரித்தார். 2005 ம் ஆண்டில் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த போது, அம்மாவட்ட காவல் துறை முதன் முறையாக ஐ.எஸ்.ஒ. தரச்சான்றிதழ் பெற்றது. 2010 ம் ஆண்டில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியாகவும், 2016-&2017 ம் ஆண்டில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும ஐஜியாகவும் பணியாற்றியவர்.
2015 ம் ஆண்டில் கேதர்நாத் வெள்ளம் மற்றும் மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் போது தேசிய பேரிடர் மீட்புக் படை தலைவராக இருந்து திறம்பட செயல்பட்டவர். 2017 முதல் 2019 வரை சிறப்பு அதிரடிப் படை தலைவராக நக்சலைட்களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் முக்கோண எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். 2019 முதல் 2021 வரை தமிழ்நாடு சிரூடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக பணியாற்றினார். அப்போது காவல் துறை பணிகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். தனது சிறப்பான பணிகளுக்காக 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதி விருதுகளை சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுள்ளார்.