ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற கர்ப்பிணிகள் கட்டில்கள் இன்றி தரையில் படுக்க வைப்பதாக பொய்யான குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே சிலர் பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை சூப்பிரண்ட் வெங்கடேஸ்வரி அவர்களிடமோ நிலைய மருத்துவ அதிகாரியிடமோ இதுவரை யாரும் எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் ஆணைப்படி கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்து மருத்துவ களப்பணி செய்து வரும் எங்களுக்கு இதுபோன்ற அவதூறு குற்றச்சாட்டுகள் மிகுந்த அளவில் மனரீதியான பாதிப்பு ஏற்படுத்துகிறது.
பெண்கள் மருத்துவம் மற்றும் குழந்தைப்பேறு நடக்கும் மருத்துவமனை என்பதால் பார்வை நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிரசவம் நடக்கும் பகுதியில் வெளி ஆண்களின் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கு தினமும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இருப்பதால் செவிலியர்கள் நோயாளிகள் தங்கும் வார்டை சுத்தம் செய்து அவர்களது படுக்கை மற்றும் தலையணை உறைகளை மாற்றுவார்கள். அப்பொழுது பாலூட்டும் தாய்மார்கள் கீழே அமர்ந்து தங்களது குழந்தைகளுக்கு பால் ஊட்டுவார்கள். நிர்வாகம் செய்வதில் கண்டிப்புடன் இருப்பதால் இதுபோன்ற தவறான செய்திகளை சமூக ஊடகத்தில் வேண்டுமென்றே சிலர் வெளியிட்டு வருவது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.