சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களின் கட்டுப்பாடு சென்னை போலீஸ் கமிஷனரிடம் இருந்து வந்தது.
நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலிருந்த காவல் மாவட்டங்கள் சென்னை, ஆவடி, தாம்பரம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அதற்கு முன்பு தாம்பரம், ஆவடி நகராட்சிகள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது, தாம்பரம் காவல்துறை ஆணையரக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ரவியின் பயோடேட்டாவை விரிவாகப் பார்ப்போம். இவர், 1991-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் பி.எஸ்சி விவசாயம், சைபர் க்ரைம் தொடர்பாக பட்டங்களைப் பெற்றவர். விவசாயத்தில் பிஹெச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்றியிருக்கிறார். தன்னுடைய முதல் காவல் பணியை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.எஸ்.பி-யாகத் தொடங்கினார். அதன் பிறகு ஓசூரில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். 1994-ம் ஆண்டு எஸ்.பி-யாகப் பதவி உயர்வுபெற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றினார். அப்போது நாகப்பட்டினத்தில் நடந்த தங்கம் முத்துகிருஷ்ணன் கொலைச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கை துரிதமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, சட்டம், ஒழுங்கையும் சிறப்பாகக் கையாண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி-யாக ரவி பணியாற்றியபோது அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்திலும் துரிதமாகச் செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்தார். திண்டுக்கல், சேலம் காவல் சரகங்களில் டி.ஐ.ஜி-யாக ரவி பணியாற்றினார். அதன் பிறகு சென்னையிலும் டி.ஐ.ஜி-யாக இருந்தார். பின்னர் சென்னையில் சட்டம், ஒழுங்கு இணை கமிஷனராகவும், போக்குவரத்துப் பிரிவில் கூடுதல் கமிஷனராகவும் ரவி சிறப்பாகச் செயல்பட்டார். சிங்கப்பூர், மலேசியா, சீனா, லண்டன், அமெரிக்கா, ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். விழுப்புரத்தில் எஸ்.பி-யாகப் பணியாற்றியபோது ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் 40,000-க்கும் மேற்பட்டவர்களைச் சேர்த்தார்.
சென்னையில் இணை கமிஷனராக ரவி பணியாற்றியபோது பிரபல ரௌடிகள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிகளில் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்தார். கூடுதல் கமிஷனராகப் போக்குவரத்து பிரிவில் பணியாற்றியபோது இ-செலான் அறிமுகப்படுத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய லியாகத் அலிகான் மீது நடவடிக்கை எடுத்தார்.
சென்னை போலீஸாரின் 150-வது ஆண்டையொட்டி `காவலர் நமது சேவகர்’ என்ற குறும்படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதினார். 2006, 2007-ம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் விருதை ரவி பெற்றார். துப்பாக்கி சுடுவதில் ரவி திறமையானவர். தமிழ்நாடு போலீஸின் பேட்மின்டன் அணியை சில்வர், தங்கம் விருதுகளைப் பெறவைத்தவர். நியூசிலாந்தில் 16,500 அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்து சாகசம் செய்தவர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றத் தடுப்பு பிரிவில் ரவி இருந்தபோது சிறார்வதை ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். தற்போது டி.ஜி.பி அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி (Administration) பதவியிலிருந்த ரவி, தாம்பரம் காவல்துறை ஆணையரக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.