“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான உதவி ஆய்வாளர்களில் ஒருவனாக அன்றைய காவல்துறை தலைவர் திரு. ஸ்ரீபால் அவர்கள் ஆற்றிய உரையை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தேனோ, அதே தமிழக உயர் காவல் பயிற்சி அகத்தில் இருந்து (TAMILNADU POLICE ACADEMY CHENNAI)
ஒரு அழைப்பு, 35 ஆண்டுகள் கடுமையானதொரு காவல்துறை பணிக்குப் பின் “மாவட்ட கண்காணிப்பாளர்” ஆக உயர்ந்து, பணி நிறைவு பெற்று 10 ஆண்டுகளாக புத்தகங்களோடு உண்டு, உறங்கி, உயிர்த்தெழுந்து, ஒரு நாடறிந்த பேச்சாளனாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, மிகப்பெரிய (TAMILNADU POLICE ACADEMY CHENNAI) தமிழக காவல் உயர் பயிற்சியகத்தில் 1000 பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த வேண்டும் என்று என் மரியாதைக்குரிய காவல் துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் திரு. அமல்ராஜ் IPS அவர்களிடமிருந்து வந்த இந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான மேடைகளில் உரையாற்றிக் கொண்டிருப்பவன் என்றாலும்கூட, என்னுடைய தாயகமான காவல்துறையில் இருந்து வந்தது என்றவுடன் ஒரு சிலிர்ப்பு.
இந்தப் பயிற்சியை நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக துவங்கி வைத்து நல்லதொரு உரை நிகழ்த்திய பிறகு, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மரியாதைக்குரிய திரு. சைலேந்திரபாபு, IPS அவர்கள் காணொளி மூலமாக அருமையானதொரு உரையாற்றிய பின்னர் இன்று காலை என்னுடைய உரை.
உள்ளபடியே எனக்கு “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவனின் வாசகம் தான் நினைவிற்கு வந்தது. இன்று(ஆண் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் சுமார் 700 பேரும் பெண் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் சுமார் 300 பேரும்) 1000 பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு உரை நிகழ்த்திய மகிழ்வானதும் நெகிழ்வானதுமானதொரு நிகழ்ச்சி.
இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு IPS அவர்களுக்கும், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. தாமரைக்கண்ணன் IPS அவர்களுக்கும், காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு அமல்ராஜ் IPS அவர்களுக்கும் காவல்துறை தலைவர் திரு. பாஸ்கரன் IPS அவர்களுக்கும் ஒரு மணி நேரம் என்னுடைய உணர்ச்சிபூர்வமான உரையை உள்வாங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர்கள 1000 பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
“GRATITUDE IS THE MOTHER OF ALL VIRTUES CICERO ROMAN EMPIRE”.