தமிழ்நாட்டில் இந்து மத கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து முதல்கட்டமாக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதற்காக மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கான அரசாணை கடந்த மாதம் 6-ம் தேதி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரியும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதிக்கக்கோரியும், கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர் இல்லாமல், நீதிமன்ற அனுமதியின்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது. கூடுதல் கல்லூரிகள் தொடங்க அறநிலையத்துறை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது.
ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. மேலும், ஏற்கனவே துவங்கப்பட்ட 4 கல்லூரிகளிலும் இந்து மத வகுப்புகள் துவங்க வேண்டும். கல்லூரி துவங்கிய ஒரு மாதத்திற்குள் இந்து மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது’ எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தவிட்டது.