புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,
முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-&22 ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புக்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
நடப்பு ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை 8.44 கோடி நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.