மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்கள் மிகவும் சிறப்பாக இந்த ஜிஆர்பி நினைவு கூடைப்பந்து கழகம் போட்டி நடத்தி முடிந்திருக்கிறது.
இந்த போட்டிக்கான நோக்கம் என்னவென்றால் சிறுவயது முதல் தங்களோடு இன்பத்திலும், துன்பத்திலும் பயணித்து மரித்துப்போன நண்பனின் நினைவாக அவரது நண்பர்கள் முன்னெடுத்து நடத்தும் போட்டிதான் இந்த ஜிஆர்பி நினைவு கூடைப்பந்தாட்ட போட்டி. இவர்களோடு மறைந்த நண்பனின் குடும்பத்தாரும் கைகோர்த்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். நண்பனுக்காக மிக பெரிய அளவில் விளையாட்டு போட்டி நடத்துகிறார்கள் என்றால் அவர் இந்த விளையாட்டு மீது கொண்டிருந்த பற்று, நண்பர்கள் மீது வைத்திருந்த பாசம் மற்றும் அவரது நற்செயல்களே ஆகும். இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றார்கள், போட்டியானது மாநில அளவிலான மின்னொளி போட்டியாக நடத்தி வருகின்றார்கள். தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த அணிகள் இதில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள விளையாட்டு அணி களை கொண்டு இப்போட்டியானது நடத்த பட்டன. இந்த ஆண்டு நடைப்பெற்ற போட்டியை வழக்கறிஞர் சுந்தரய்யா துவக்கி வைத்தார். மொத்த 5 அணிகள் பங்கேற்றனர். ஜிஆர்பி யின் பி அணி சுழற்கோப்பையை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஏ அணி இரண்டாம் இடத்தையும், யங்க் சேலன்ஜர்கள் கிளப் மூன்றாம் இடத்தையும், எஸ்எம் ஹெச்எஸ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.
நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினர்கள் வணங்காமுடி, பால சங்கரன், சந்திரமோகன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தம்பையா கலந்து கொண்டார்கள். போட்டி ஏற்பாடுகளை ஜிஆர்பி நினைவு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் காந்தி நாதன், பொருளாளர் வடிவேலு, செயற்குழு உறுப்பினர்கள் சார்லஸ், சதீஷ் ஆகியோர் செய்தனர். செயலாளர் ராஜூ நன்றி கூறினார்.
வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக மீண்டும் மாநில அளவில் போட்டியை நடத்த உள்ளார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், வியாபார சங்கத்தினர், காவல் துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல விளையாட்டு கழகங்கள் அனைவரையும் இந்த தருணத்தில் இவர்கள் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.