மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 32,05,98,542 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 15,44,25,837 பேர் வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 1,36,11,715 பேர் பதிவு செய்து 94,68,757 பேர் வேலைக்கு சென்று வருகின்றனர். 100 நாள் வேலைக்கு வருபவர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்கப்படுவது வழக்கம். இதில், வேலைக்கு வருபவர்கள் பேப்பரில் மட்டும் கையொப்பமிட்டு வருகை பதிவேட்டில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
எனவே, இதில் ஒரு வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என மத்திய அரசு கருதியது. இதையடுத்து, மொபைல் அப்ளிகேஷன் மூலம் வருகை பதிவை கடைபிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த மே 16,2022 முதல் 20 அதற்கு மேற்பட்ட அனைத்து பணியிடங்களுக்கு ஆப் மூலம் வருகைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்த இடங்களில் தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (என்.எம்.எம்.எஸ்) என்ற செயலி மூலம் வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், ஜியோடேக் (போட்டோ மற்றும் வீடியோக்கள் அடங்கிய புவியியல் இடங்கள்) முறையில் தொழிலாளர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யபட வேண்டும்.
கிராமங்களில் தொழில்நுட்ப வசதி இல்லாமை, ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டிய அவசியம் இணைய இணைப்புக்கு பணம் செலுத்துதல் மற்றும் ஒழுங்கற்ற இணைய இணைப்பில் சிக்கல் என பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், தொழிலாளர் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் மொபைல் ஆப் சேவையை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், அனைவரும் முற்பகல், பிற்பகல் என இருவேளையும் குறித்த நேரத்தில் செல்போன் செயலி மூலமாகப் தங்கள் வருகையை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.