வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/
என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள், மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த புதிய மென்பொருள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள எல்லா மனைகளும் உள்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரில் பட்டா வழங்கப்படும். மேலும், தனித்தனியே பொதுமக்கள் அந்த மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்றவர்கள் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்துக்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் செல்லவோ தேவை இல்லை. அதேபோல், நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவிர்க்கப்படும்.