அடிக்கு அடி, உதைக்கு உதை,பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம், என்பதெல்லாம் கீழ்த்தரமான, தரங்கெட்ட, கெட்ட எண்ணம் கொண்ட நயவஞ்சகமான, நரித்தனமான மனிதர்களின் ஆயுதம்… அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் உடையவர்கள் மனிதன் என்கின்ற அடிப்படை பண்பை இழக்கிறார்கள்.
மனிதன் என்னும் போர்வையில் பசுத்தோல் போர்த்திய மிருகமாக வாழ்கிறார்கள். அதை அறவே தவிர்க்கத்தான் அறவழியில் வாழ இயேசு நாதர் அவர்கள் ஒருவர் ஒரு கன்னத்தில் உன்னை அறைந்தால் நீ அவர்களுக்கு மறுக்கன்னத்தை காட்டு என்றார்.
எதிரியை நண்பனாக்குவதன் மூலமாக நான் எதிரிகளை எளிதில் வீழ்த்துவேன் என்றார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்கள், தென்னாப்பிரிக்காவில் சிறையில் இருந்த பொழுது பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சிறைத்துறை அதிகாரிக்கு தனது கையாலே புதிய பூட்டை (Boot) தைத்துக் கொடுத்தார் மகாத்மா காந்தி அடிகள், பகைவருக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்றார் முண்டாசு கவிஞன் முறுக்கு மீசை கொண்ட மகாகவி பாரதியார் அவர்கள், கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்ய வேண்டும் என்றார் காந்திய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் அவர்கள், கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்று அடக்கு முறைக்கு எதிராக அறிவு என்கிற ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று கூறினார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்..
சினிமா என்னும் போதையில் மதி மயங்கி தனது சுய சிந்தனையை, சுய அறிவை அறவே இழந்து திரைப்படத்தின் காட்சிகளை மையமாக வைத்து வன்முறையில் இறங்குகிறார்கள், தடம் பதிக்கும் வயதில் தடுமாறி தடம் மாறி தவறான வழியில் செல்கிறார்கள், ஆச்சரிய குறியாக இருக்க வேண்டிய இன்றைய இளைஞர்களின் நிலையானது கேள்விக்குறியாக உள்ளது என்பதை நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது, சிந்திக்க மறக்கும், சிந்திக்க மறுக்கும் இன்றைய இளைஞர்களின் நிலையானது மாற்றத்தை நோக்கியும் வளர்ச்சியை நோக்கியும் இருக்க வேண்டும் என்பதை எனது ஆவல் ஆகும்.
இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் பழிக்கு பழி வாங்கினால் உங்களை வரலாறு தாழ்த்தும், வருகின்ற தலைமுறையெல்லாம் உங்களை வசை பாடும் எனவே பழிக்குப் பழி வாங்காமல் பகைவருக்கும் நீங்கள் நல்லதை செய்தால் வரலாறு உங்களையும், உங்கள் வாழ்க்கையையும் நிச்சயம் வாழ்த்தும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்று சமூகப்பற்றாளன் ஞானசித்தன் (எம்ஜிஆர் தாசனின்) ஆகிய எனது அன்பான வேண்டுகோள் ஆகும்….
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பொழுதும், மீண்டும் சிறையில் வந்து ஒப்படைக்கும் பொழுதும் இடைப்பட்ட பயணத்தில் இளம் வயதில் தவறு செய்து தண்டனை பெற்ற தனது வாழ்வை தொலைத்த இளம் வயது சிறைக் கைதிகளிடம் நான் அன்பாக பேசுவேன்… பெரும்பாலானவர்கள் உணர்ச்சிக்கு உட்பட்டு சூழ்நிலை கைதிகளாக மாறியவர்களாகவே இருக்கிறார்கள்.. குறிப்பாக சினிமாவைப் பார்த்து சினத்தை ஆயுதமாக நினைத்து சிறைக்கு வந்தவர்களே அதிகம்.
கோவை மாநகர காவல் ஆயுதப்படையில் நான் பணிபுரிந்த பொழுது அவசர வேலையின் காரணமாகவும், கவனம் சிதறியதால் நான் என்னை அறியாமல் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டு விட்டேன் துப்பாக்கில் இருந்து குண்டானது தவறுதலாக வெடித்து விட்டது. அதனால் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும், பொருட்சேதமும், யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை என்றாலும் உயர் அதிகாரி இதைக் கேள்விப்பட்டவுடன் துப்பாக்கியில் இருந்து செல்லும் புல்லட் போல நான் இருக்கும் இடத்தை தேடி விரைந்து வந்தார்.
இன்முகத்தோடும், மிகுந்த பூரிப்போடும், உற்சாகத்தோடும், லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்ததைப் போல அவர் முகத்தில் மிகுந்த உற்சாகம், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது, சம்பவ இடத்திற்கு வந்தவர் மிக மகிழ்ச்சியாக சிரித்தவாறு என்னிடம் கூறிய வார்த்தை என்னவென்றால்..
நீ ஏதேனும் ஒன்றில் மாட்டுவாய் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன், தற்போது நீயாகவே வந்து குழியில் விழுந்து விட்டாய் என்று தனது சுயரூபத்தை தனது வார்த்தையால் வெளிப்படுத்தினார்.
வெளியில் தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு மனதிற்குள் இப்படி வக்கிர புத்தி வைத்து உள்ளார் என்பதால் நான் துளியும் மனம் தளரவில்லை. செய்த தவறுக்கு தண்டனை தரும் காலம் போய் தண்டனை தருவதற்காகவே ஏதேனும் பிழையை எதிர்பார்த்து கொக்கு போல காத்து கொண்டிருக்கும் அவரின் வக்ர புத்தியை நான் தெரிந்து கொண்டேன்… கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியது போல நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
அந்த நிகழ்வானது வேண்டுமென்றே நான் செய்த தவறில்லை என்ற போதும், என்னை அறியாமல் செய்த தவறுக்காக என்னை கெடுப்பதற்காகவும், எனது வளர்ச்சியை தடுப்பதற்காகவும், வேண்டுமென்றே வெறி நாய் போல கடிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் அவர்களின் சதிகளுக்கு நான் சங்கடப்படவில்லை.
அதற்காக என்னை நான்கு மாதம் பணியிடை நீக்கம் செய்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே தவறை வேறு நபர்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.. அதாவது ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பது போல எனது வாழ்க்கையானது பல தடைகளை பல சவால்களை பல சதிகளை கொண்டது அவற்றையெல்லாம் கடந்து நெருப்பாற்றில் நீந்தி இன்று உங்கள் முன் நான் ஆய்வாளராக உயர்ந்துள்ளேன்…
தொட்டால் தீட்டு கைப்பட்டால் குற்றம் என்று நேரடியாக கூறி தீண்டாமையை கடைப்பிடித்த காலம் மலையேறி போய், அதிகம் படித்து கல்வியறிவு பெற்று, தகுதி, திறமை, ஆற்றல், அறிவு, இப்படி வாழ்வில் நான் வெற்றி பெற்று இருந்தாலும் அவர்களின் மனதில் நச்சுத்தன்மையோடு நவீன தீண்டாமையானது தலைவிரித்து ஆடியது என்பதே உண்மை. அந்த கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களின் உடையானது நாகரீகமாக இருந்தாலும், காவல் அதிகாரியாக உயர்ந்து இருந்தாலும் அறிவால் இன்னும் அவர்கள் ஆதிவாசிகளாகவே இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும், காலம் கனியும்போது அது திரைப்படமாக எடுக்கப்படும். ஜாதி வெறியால் அவர்கள் செய்த கொடுமைகளால் எனது ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு கானல் நீரானது மட்டுமே மிச்சம்..
சரி நண்பர்களே இன்றைய கட்டுரைக்கு நான் வருகிறேன்…
எம்ஜிஆரின் விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்
இன்று பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள், நடிகைகள் துணை நடிகர்களாக இருந்து, தங்களின் திறமையின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள். முதல் படத்திலேயே நாயகனாகி, முதல் படமே வெள்ளிவிழா கண்ட சிவாஜி போல் அனைவருக்கும் சினிமா வாழ்க்கை அமைந்து விடாது. எம்ஜிஆருக்கே அப்படி அமையவில்லை.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான எம்ஜிஆருக்கு தொடர்ந்து சின்னச்சின்ன வேடங்களே கிடைத்து வந்தன. 1947 இல் தனது பதினைந்தாவது படம் ராஜகுமாரியில்தான் பிரதான வேடத்துக்கு வந்தார். அப்படியும் தொடர்ந்து நாயக வேடம் அமையவில்லை. மீண்டும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. ராஜகுமாரிக்குப் பிறகு 1950 இல் மருதநாட்டு இளவரசியில் நடிக்கும்வரை இடைப்பட்ட காலத்தில் பல படங்களில் துணை வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். ரத்னகுமாரில் டைட்டில் ரோலில் பி.யூ.சின்னப்பா நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் பானுமதி. எம்ஜிஆர் பலத்தேவன் என்ற சிறிய வேடத்தில் நடித்தார்.
பானுமதி நாயகியாக நடித்த ரத்னகுமாரில் துணை வேடத்தில் நடித்த எம்ஜிஆர் பிற்காலத்தில் பானுமதிக்கே ஜோடியாக நடித்தார் என்பது வரலாறு.
மதுரை வீரன், மலைக்கள்ளன், ராஜா தேசிங்கு, அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன வரலாறு படைத்தன என்பது குறிப்பிட்ட தக்கதாகும். இருவரின் கூட்டணியும் ஜோடி பொருத்தமும் வெகுஜன மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன மகத்தான ஆதரவு பெற்றன என்பது உண்மையாகும்.
(வழி தொடரும்…)
- எம்ஜிஆர் தாசன்