பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தனித்துவமான கைப்பேசியை எப்படி இயக்க வேண்டும் என்று ஒரு வழியாக கற்றுக் கொண்ட முத்து தன் கவனத்தை தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கையேடு மற்றும் பேனா பக்கம் மீண்டும் திருப்பினார். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் சற்று உற்று நோக்கும் போது தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கையேடும், பேனாவும் மிகவும் தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது என்பதை விரைவில் அறிந்து கொண்டார் முத்து.
அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பேனாவின் தலையில் 3 இலக்க எண் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பேனாவில் கண்ணிற்கு எளிதில் புலப்படாத கேமராவும் தன் இடத்தை தெரிவிக்கக் கூடிய ஜிபிஎஸ் கருவியும் இருப்பதை தனித்துவமான அந்த அலைபேசி மூலம்அறிந்து கொண்டார். அந்த பேனாவை எடுத்து கையேட்டில் தனது பெயரை எழுதியபோது அந்த தனித்துவமான அலைபேசி தானாகவே உயிரூட்டப்பட்டு திரையளவு சம பங்காக பிரிக்கப்பட்டு ஒரு பக்கத்தில் முத்து தன் கையேட்டில் எழுதிய எழுத்துக்களும் மறுபக்கத்தில் இந்திய வரைபடத்தில் பேனா குறியீட்டு முத்து இருக்கும் வீட்டை தற்போதைய இருப்பிடம் என்று காட்டியது. மேலும் பேனாவில் உள்ள கேமராவை இயக்க பேனாவும் கேமராவும் இணைந்த சின்னம் சிறிதளவில் ஒரு ஓரமாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆங்கில பட பாணியில் தொழில் நுட்பக் கருவிகள் நம்மிடம் இருப்பதை உணர்ந்து முத்து விவரிக்க முடியாத ஆச்சர்யத்திலும் சந்தோசத்திலும் மூழ்கி இருந்தார். அதே நேரத்தில் இதுவரை வெளி உலகில் புழக்கத்தில் இல்லாத இது போன்ற பொருட்களை நம்மிடம் கொடுத்திருப்பதன் காரணம் பெரிய அளவில் இருக்கப் போகிறது என்றும் இனிமேல் வரப்போகும் நாட்களில் எதிர் வர காத்திருக்கும் பொறுப்புச் சுமைகளை எண்ணி சற்று மன கலக்கத்தோடு இதுவரை அந்த பொருட்கள் தன்னிடம் வந்ததற்கான காரணம் பற்றி புரியாமல் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தார். மறுபுறம் தேவாலயத்தில் ஜானின் மனைவி கிறிஸ்டினா தன் கணவர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றது பற்றி தன்னிடம் கூட கூறவில்லை என்று எண்ணி மனம் வருந்தி கொண்டிருந்தார் இருப்பினும் இதைப் பற்றி தன் கணவரிடம் கேட்பதற்கு மனம் இல்லாமல் தன் கணவர் வாழ்வின் முக்கிய தருணம் ஆனா இப்படி ஒரு தருணத்தை தன்னிடம் கூற மறுத்து இருப்பதற்கு கண்டிப்பாக முக்கியமான காரணம் ஏதோ ஒன்று இருக்கும் என்று எண்ணி தனது மன வருத்தத்தை போக்க தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.
ஒரு வழியாக பிரார்த்தனை கூட்டம் தொடங்கியது. ஒலிபெருக்கியின் முன் வந்த பாதிரியார் சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பிரார்த்தனையை தொடங்கினார். பாதி கூட்டம் முடிவடைந்த நிலையில் ஜானை கவனித்துக் கொண்டிருந்த கிறிஸ்டினா அதுவரை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முழு ஈடுபாட்டுடன் மனமுருகி பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்த தன் கணவரிடம் இருக்கும் மாற்றத்தை உணர்ந்தார். கண்டிப்பாக இதைப்பற்றி வீட்டிற்கு சென்றவுடன் கேட்க வேண்டும் என்று தோன்றியது கிறிஸ்டினாவிற்கு. மீண்டும் தன் கவனத்தை பிரார்த்தனைகள் செலுத்தி கண்களை மூடிய கிறிஸ்டினா சட்டென்று கண்களை திறந்தார். ஜானின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவர் மண்டியிட்டு அமர்ந்திருந்த மேசையின் மேல் பட்டு கிறிஸ்டினாவின் கைகளில் தெரிந்ததே அதற்கு காரணம். திருமணம் ஆகி ஆண்டுகள் பல கடந்து வந்திருக்கும் கிறிஸ்டினா அதுவரை தன் கணவர் பிரார்த்தனையில் கண்ணீர் விட்டதை பார்த்ததே இல்லை. ஜானின் கண்ணீரைப் பார்த்த நொடியில் கிறிஸ்டினாவின் கண்கள் கிறிஸ்டினாவிற்கே தெரியாமல் கசிந்து கொண்டிருந்தன.
அதுவரை கடவுளிடம் கோரிக்கை இல்லாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த கிறிஸ்டினா மீண்டும் தன் கண்களை மூடி தன் கணவரின் கஷ்டங்களைப் போக்கி அவருக்கு மன நிம்மதியை பரிபூரணமாக வழங்க கோரிக்கை கொண்டு தன் பிரார்த்தனையை தொடங்கினார். மறுபுறம் இரவு உணவு அருந்துவதற்காக கடை தெருவிற்கு கிளம்பி கொண்டிருந்த முத்து தனது வீட்டு வாசல் முன் யாரோ ஒருவர் வந்து நிற்பது போல் சத்தம் கேட்டு வெளியே சென்றார். கையில் ஒரு தபாலுடன் முத்துவின் வாசல் கதவை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் முத்துவை பார்த்தவுடன்” சார் இங்கு முத்து..” என்று அவர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட முத்து” நான் தான் முத்து என்ன விஷயம்“ என்றார். “சார் உங்களுக்கு கொரியர்” என்று கூறிவிட்டு தபாலையும், பெற்றுக் கொண்டதற்கான சான்று கையெழுத்து இட வேண்டிய சீட்டையும் பேனாவுடன் சேர்த்து நீட்டினார் அந்த நபர். முத்துவும் அதை வாங்கி உடனே கையெழுத்திட்டு அந்த நபரை அனுப்பி வைத்தார்.
தான் இங்கு வந்து ஒரு நாள் கூட முழுவதுமாக நிறைவு பெறாத நிலையில் தனக்கு யார் தபால் அனுப்பியது என்றும், தனது பேரில் இந்த முகவரிக்கு தபால் வருவது எப்படி சாத்தியம் என்று குழப்பத்துடன் வீட்டிற்குள் சென்ற முத்து கடைத்தெருவிற்கு செல்ல கிளம்பியதை மறந்து கையில் இருந்த தபாலை உடனடியாக பிரித்தார். ஜான் வீட்டிற்கு வந்தது போலவே கருஞ்சிவப்பு மற்றும் அடர் ஊதாவும் கலந்த வண்ணமாக இருந்தது அந்த தபால். மேலும் ஜானிற்கு வந்தது போலவே ஒரு வெள்ளை தாளில் ஸ்கேன் என்று எழுதப்பட்டு அதற்கு கீழ் பார்கோடு ஒன்றும் இருந்தது. சுதாரித்துக் கொண்ட முத்து அந்த புதிய தனித்துவமான அலைபேசியை எடுத்து அந்த தாளில் உள்ள பார்கோடு ஸ்கேன் செய்தார். அதுவரை மங்கலாக இருந்த திரை முன்பு பேனாவில் எழுதிய போது உயிரூட்டப்பட்டது போல் மீண்டும் உயிர் பெற்றது. பிரகாசம் அடைந்து வெள்ளை திரையில் முத்துவின் புகைப்படம், பெயர் மற்றும் அவரின் காவல் துறை வரிசை என் வந்தது. அதற்கு கீழே மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரி என்றால் கைரேகை பதிவிடவும் என்று கைரேகை பதிவிடுவதற்கு திரையில் ஒரு கட்டம் தோன்றியது.முத்து தனது கை ரேகையை திரையில் பதித்த போது மீண்டும் ஒரு கட்டம் தோன்றி முகம் மற்றும் கண்களை பதிய அறிவுறுத்தியது.
முத்து பதிந்து முடித்த நொடியில் திரையில் வணக்கம் முத்து என்று தோன்றி மறைந்தது இரண்டு நொடிகள் அலைபேசி தானாகவே அணைக்கப்பட்டு மீண்டும் தானாகவே உயிரூட்டப்பட்டது. திரையில் கண்கள் மற்றும் கைவிரல் சின்னங்கள் இட்டு கட்டங்கள் இருந்தன. கண்களையும் கைவிரல் ரேகையையும் ஒரே நேரத்தில் பதிவிட்ட முத்து திரையில் அடுத்து தோன்றியதை கண்டு அதிர்ந்து போனார்.
(தொடரும்…)