சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பஜார் தெரு, எண்.16, என்ற முகவரியில் கற்பகம், பெ/வ.36, க/பெ.கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். கடந்த 09.09.2018 அன்று கற்பகத்தின் வீட்டின் அருகில் வசிக்கும் மோசஸ் சராக் என்பவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து செல்வதற்கு, கற்பகம் தான் காரணம் என நினைத்து, கற்பகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மோசஸ் சராக் சுத்தியலால் கற்பகத்தின் தலையில் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த கற்பகத்தை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேற்படி சம்பவம் குறித்து, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து எதிரி மோசஸ் சராக், என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மறுநாள் (10.09.2018) இரவு சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்துவிட்டார். அதன்பேரில், மேற்படி வழக்கில் கொலை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை, அல்லிக்குளம் வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் 27.02.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி மோசஸ் சராக் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி மோசஸ் சராக் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.16,000/- அபராதமும் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உரிய மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.