சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக் குறிச்சி மாணவன் சந்துரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், தொளசம் பட்டி பகுதியில் குரூப்- 4 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற வேதனையில், பிஏ பட்டதாரி இளம்பெண் மனோன்மணி என்பவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளார்.
இத்தகைய தற்கொலை முடிவுகளை படிக்கும் மாணவர்களும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் பட்டதாரிகள் உள்ளிட்ட இளைஞர்களும் எடுக்கக்கூடாது. அதை தாண்டி வாழ்க்கை இருக்கிறது என சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது:
சமீபகாலமாக தேர்வு முடிவுகளைக் கண்டு பயந்தும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத விரக்தியிலும் மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. இது கோழைத்தனம் மட்டுமல்ல, தன்னம்பிக்கையை இழந்த நிலையாகும். பல இளைஞர்கள் தங்கள் முயற்சியால் வெற்றிக்கொடியை நாட்டும் போது, மிகக் குறைவான இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழந்து சில சமயங்களில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கையை பற்றி முழுமையாக என்ன தெரியும்? 20 வயதில் எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் சரியா?. இன்னும் 60-&70 ஆண்டுகளுக்கு அருமையான வாழ்க்கை காத்திருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், வெற்றி பெறும் அளவிற்கான மதிப்பெண்களை எடுக்க முடியாமல் குறைந்துவிட்டால், அதோடு வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைக்கக் கூடாது. வகுப்பறைக்கு வெளியே தான், பெரிய வாழ்க்கை இருக்கிறது. மதிப்பெண்களால் ஒருவர் மதிப்பு பெறுவதில்லை. மதிப்பெண்கள் எல்லாம் வெறும் எண்களே.. அதை தாண்டி வாழ்க்கை இருக்கிறது. மிகவும் நன்றாக படித்து தேர்வானவர்கள், விரும்பிய வேலையில் மாத சம்பளம் பெறலாம். மதிப்பெண் குறைவாக வாங்கியவர்கள், போட்டி தேர்வுகள் எழுதி ஆட்சியாளராகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் வரலாம். ஒரு குறிப்பிட்ட படிப்பை படித்தால் மட்டும் தான், சமுதாயம் மதிக்கும் என்றில்லை. இதைத்தான் படிப்பேன். இதை மட்டும் தான் படிப்பேன் என்று நமக்கு நாமே ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு சிக்கி தவிக்க தேவையில்லை. எனவே, மாணவர்கள் நேர்மையாக படிக்க வேண்டும். என்ன மதிப்பெண் வருகிறதோ. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மதிப்பெண்ணுக்கு தகுந்த பாடப்பிரிவு கிடைத்தால், அதில் படித்து பிரகாசிக்க வேண்டும்.
நாமாக ஏமாந்து மடிந்து போவது வாழ்க்கை அல்ல. இந்த பூமியில் கிடைத்ததை எண்ணி மகிழ்வாக வாழ வேண்டும். பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல், உதவி செய்து வாழ வேண்டும் என்பதே இந்த பிறப்பின் மிக முக்கிய குறிக்கோள். இளைஞர்களின் சக்தி காட்டாற்று வெள்ளம் போன்றது. அதை அலைபாய விட்டு விட்டால், காடுகளையும் பயிர்களையும் அடித்து வீணாக்கிவிடும். ஆனால் அதே இளைஞர்கள் சக்தியை அணை கட்டி தேக்கி வைத்தால், சிறந்த வேலையை உண்டாக்க முடியும். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையோடு, வாழ்க்கை நடைமுறையும் உணர்த்தி உருவாக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி கூறினார்.