பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிறிஸ்டினா முத்துவிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார் ஜான். முத்துவை போலவே ஜானும் வியர்த்து நனைந்தார். “என்ன உலர கிறிஸ்டினா?” என்று ஜான் கேட்டு முடிப்பதற்குள் “ஜான் அண்ணா ஒரு நிமிடம்” என்று ஒரு குரல் கேட்டது. கிறிஸ்டினா, ஜான், மற்றும் முத்து மூவரும் திரும்பி பார்த்தனர். ஜானுடன் வேலை செய்யும் அந்த பெண்ணின் குரல் தான் அது. அந்தப்பெண் தன் கணவரை பார்த்து சீக்கிரம் வாங்க என்று கூறிவிட்டு வேகமாக நடந்து வந்து கிறிஸ்டினா அருகே நின்றார்.
மீண்டும் பேச ஆரம்பித்த அந்தப் பெண் அதிகாரி, ஜானை பார்த்து ”என்னண்ணே உங்களுடைய ரிட்டயர்மென்ட் நாங்க ஆர்டர் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கு. என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலையே அண்ணே” என்று அவர் கேட்டதும் ஜானிற்கும் முத்துவிற்கும் விஷயம் ஓரளவு புரிய தொடங்கியது. ஏதும் பேசாமல் சிரித்து மழுப்பினார் ஜான். தனது உயிருக்கு உயிரான மனைவியிடம் இதைப் பற்றி கூற முடியவில்லை என்று மனம் நொந்து கொண்டார். சூழ்நிலையை குழப்ப விரும்பாத முத்து தான் என்ன சொல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக ஜானை தேடி பசி மறந்து வந்தாரோ அதை தற்போது ஜானிடம் கூறுவது ஏதுவாக இருக்காது என்று பேச்சை மாற்றினார்.
“ஜான் இதுக்காகத்தான் என்னை சாப்பிட வர சொன்னியாப்பா” என்று முத்து கேட்டதும் சூழலை ஏற்றுக் கொண்ட ஜான் “அப்படி எல்லாம் இல்ல முத்து நீங்க தனியா தானே வீட்டில் இருப்பீர்கள். உங்கள் வீட்டில் இருந்து எல்லாரும் வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும் இல்ல. அதான் சாப்பிட வர சொன்னேன்” என்றார்.
‘’சரி வாங்க பேசிக்கிட்டே இருந்தா எப்படி? எனக்கு பசி வைத்த கில்லுது எங்கே சாப்பிடுவோம்?” என்றார் முத்து. “என்ன அண்ணே சாப்பாடு முத்து சாருக்கு மட்டும்தானா” என்றார். அந்த பெண் அதிகாரி “அப்படி எல்லாம் ஒன்றுமில்லையம்மா உங்கள் எல்லாருக்கும் தனியா ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கலாம் என்று இருந்தேன். இப்போது என்ன கெட்டுப் போச்சு எல்லாரும் வாங்க போய் சாப்பிடுவோம்” என்று கூறிவிட்டு கிறிஸ்டினாவை தோளில் அணைத்தவாறு நடக்க தொடங்கினார் ஜான். முன்னே நடக்கத் தொடங்கிய ஜானையும் கிறிஸ்டினாவயும் முத்துவும் அந்த பெண் அதிகாரியும் அவரது கணவரும் பின்தொடர்ந்தனர்.
”ஐ அம் வெரி சாரி கிறிஸ்டினா இதைப்பற்றி உன்னிடம் பொறுமையாக பேசலாம் என்று தான் சர்ச்சுக்கு அழைச்சிட்டு வந்தேன். நான் முன்னாடியே சொல்லி இருக்கணும் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிரு” என்றார். “நம்ம அப்புறமா பேசலாம் வாங்க போய் சாப்பிடலாம்” என்று கூறிவிட்டு தேவாலயத்தின் அருகே இருந்த உணவகத்திற்குள் நுழைந்தார் கிறிஸ்டினா. கிறிஸ்டினாவை தொடர்ந்து ஜான் முத்து அந்த பெண் அதிகாரி மற்றும் அவர் கணவர் என அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
அதுவரை சூழ்நிலையில் பதட்டத்தில் சிக்கியிருந்த முத்து பசியை மறந்திருந்தார். ஆனால் உணவகத்திற்குள் நுழைந்ததும் மொத்த பசியில் முத்துவிற்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிட்டது சட்டென்று ஒரு மேஜை அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்ட முத்து “வாங்க வாங்க இங்கே உட்காருங்க சாப்பிடலாம்” என்று கூறிவிட்டு பசி தாங்க முடியாமல் “அண்ணே எனக்கு இரண்டு பரோட்டா முதலில் வைத்திருங்கள்” என்றார். முத்துவின் இந்த செயல் மற்ற அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
“முத்து சார் எல்லாருக்கும்தான் பசிக்குது எங்களுக்கும் சேர்த்து சொல்லுங்க” என்றார் அந்த பெண் அதிகாரி. “சாப்பாடு விஷயத்துல கூச்சப்படக்கூடாது என்ன வேணுமோ கேட்டு வாங்கி சாப்பிடுங்க ஜான் சார் காசு குடுத்துடுவாரு” என்று வேடிக்கையாக பேசினார் முத்து. சற்று நேரத்தில் அனைவருக்கும் அவரவர் கேட்ட உணவு வந்து சேர்ந்தது. தன் வேடிக்கை பேச்சால் அனைவரும் உணவு உண்டு முடிக்கும் வரை அனைவரது முகத்திலும் சிரிப்பை வரவழைத்தார் முத்து.
இதற்கிடையில் உணவு உண்டு முடிக்கும் வரை கிறிஸ்டினா முத்துவையும் ஜானையும் மாறி மாறி பார்த்தார். இது பொதுவான பார்வை இல்லை என்பது ஜானிற்கும் முத்துவிற்கும் நன்றாகவே விளங்கியது இருப்பினும் தன் வேடிக்கை பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தார் முத்து. ஒரு வழியாக அனைவரும் உணவு உண்டு முடித்துவிட்டு அந்த பெண் அதிகாரியும் தன் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொண்டு இவர்களிடமிருந்து தன் கணவருடன் விடை பெற்றார்.
ஜான் எழுந்து ”நான் போய் பில் செட்டில் பண்ணிட்டு வந்துடறேன்” என்று கிளம்பினார். ஜானின் கால்கள் இரண்டு மூன்று அடி எடுத்து வைத்ததும் கிருஸ்டினாவின் மௌனம் கலைந்தது. கிறிஸ்டினா முத்துவை பார்த்து ”அண்ணே என்கிட்ட ஏதாவது சொல்லனுமா” என்று கேட்டார். “என்னம்மா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே” என்றார் முத்து. “நான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டேனு மட்டும் தெரியுது ஆனா அது என்னன்னு தெரியல இருந்தாலும் நீங்க எதையோ என்கிட்ட மறைக்கிறீங்க வேலை விஷயமா இருந்தா சொல்ல வேண்டாம் வேறு ஏதாவது இருந்தா கண்டிப்பாக என்கிட்ட தயவு செஞ்சு சொல்லிருங்க என்று பொறுமையான குரலில் முத்துவிடம் கூறினார் கிருஸ்டினா.
”அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தங்கச்சி நீ மனச போட்டு குழப்பிக்காத நாங்க எப்பவும் போல தான் இருக்கோம்”. என்று மழுப்பினார் முத்து. மீண்டும் குறுக்கிட்ட கிறிஸ்டினா “அண்ணே ஜான் முகத்தைப் பார்த்து அவர் உண்மையை சொல்றாரா பொய் சொல்றாரான்னு நான் கண்டுபிடிச்சிடுவேன் அவர் இன்னைக்கு உங்களை சாப்பிடவே கூப்பிடல ஆனா நீங்க அவர்தான் சாப்பிட கூப்பிட்டார் என்று பொய் சொல்றீங்க அத புரிஞ்சுகிட்டு வேற ஏதோ விஷயத்தை பேச வந்து அதை மறைக்கிறீங்கன்னு அவரும் உங்களோடு சேர்ந்து பொய் சொல்றார் இது மட்டும் எனக்கு நல்லா புரியுது ஆனா ஏன் என்று தான் புரியல”என்றார்.
இதைக் கேட்டதும் முத்து ஒரு நொடி அதிர்ந்து மெல்லிய புன்னகையுடன் கிறிஸ்டினாவிடம் “உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு தங்கச்சி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது உண்மைதான் போல, உன்னை போல் ஒரு தங்கச்சியும், ஜானை போல ஒரு நண்பனும் கிடைக்க நான் உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்” என்று பெருமிதம் கொண்டார் முத்து.
(தொடரும்…)