புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவியாளரை தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது வாகனத்தில் அமர வைத்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேங்கை வயல் கிராம விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் செயல்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த கிராமத்திலிருந்து சாதி வேறுபாடுகள், இரட்டைக் குவளை முறை, தீண்டாமை போன்றவற்றை எதிர்த்து அதிரடியான பல நடவடிக்கைகளை கவிதா ராமு எடுத்திருந்தார்.
அதற்குப் பிறகு அந்த கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைக்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவரை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அண்ணா என்று அழைத்து அந்த மக்களின் நெகிழ வைத்தார்.
பணியின் காரணமாக ஒரு இடத்திற்கு ஆய்வுக்குச் சென்ற போது மழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் உதவியாளர் குடை பிடித்துள்ளார். அப்போது வேண்டாம் என அவர் கூறிவிட்டு அவரே பிடித்துச் சென்றுள்ளார். இவ்வாறு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் செயல் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தனது உதவியாளர் ஓய்வு பெற்றதைச் சிறப்பிக்கும் வகையில் தனது காரிலேயே அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.