இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம் சார்ந்த பிரிவுக்கு மட்டுமே, முதல்வர் காப்பீடு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிறுநீரகம் சார்ந்த சிகிச்சைக்கு, மற்றொரு மருத்துவமனை அல்லது கட்டணம் செலுத்தி, மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் கூறியதாவது: சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு, இதய நோய் சிகிச்சைக்கு தந்தையை அழைத்து சென்றேன். முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், சிகிச்சைக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டது. படுக்கை, இதர செலவுகள் என, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியதாக இருந்தது.தந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னையும் இருந்ததால், மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறி விட்டனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் காப்பீடு வழங்குவதுபோல், தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் காப்பீடு நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீடு திட்டத்தில், எந்த பிரிவு சிகிச்சைக்கு அனுமதி கேட்கின்றனரோ, அதை ஆராய்ந்து தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 1.27 கோடி பேருக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில், இதய சிகிச்சையுடன் சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த உயர் சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோருக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், அரசிடம் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உடனடியாக பரிசீலித்து, அனைத்து வகையான சிகிச்சைக்கும் காப்பீட்டு தொகை வழங்க அனுமதிக்கப்படும்.ஆனால், சில தனியார் மருத்துவமனைகள், அவ்வாறு செய்ய முன்வருவதில்லை.
மாறாக, இதய சிகிச்சைக்கு மட்டுமே காப்பீடு தொகை பெற்று, மற்ற சிகிச்சைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்து வருகின்றன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர், அனைத்து உயர் சிறப்பு சிகிச்சைகளை அதே மருத்துவமனையில், முதல்வர் மருத்துவ காப்பீட்டில் பெற முடியும். இதுகுறித்து சந்தேகம் மற்றும் புகார்களுக்கு, ‘104’ மற்றும் 1800 425 3993 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.