உலகம் முழுதும் ஆளுவதற்கு
தன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!
தேய்வது உறுதியாக தெரிந்திடினும்
விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு!
தென்றலோ சூறாவளியோ
எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!
மேலிருந்து மண்ணில் விழுந்திடினும்
உடையாமல் மீண்டும் மேகமாகிறதே மழைத்துளி!
எல்லைகள் என்றும் கண்களுக்குத்தான்
எனக்கில்லை என்று விரிவடைகிறதே தொடுவானம்!
பரந்து விரிந்து இருப்பினும்
நாடுபவரின் பாதம் வருடுகிறதே பெருங்கடல்!
எத்தனை சீற்றங்கள் கடந்திடினும்
அசையாமல் உறுதியாக நிற்கிறதே மலை!
மேடுகள் பல வழியில் வந்திடினும்
தனக்கான பாதை வகுக்கிறதே ஆறு!
தன்னை மதிப்பவருக்கும் சிதைப்பவருக்கும்
ஒரே மாதிரி பயனளிக்கிறதே நிலம்!
உயிர்கள் துயில் கொள்ள
இருளைத் தனதாக்குகிறதே பகல்!
உழைப்பவர் மேன்மை அடைய
விடியலில் எழுந்துக் கொள்கிறதே இரவு!
பல விழிகள் மலர்ந்திட
தன்னையே வளைத்துக் கொள்கிறதே வானவில்!
மோதும் மேகங்களின் வன்முறைக்கெதிராக
முடிந்தமட்டும் குரல் எழுப்புகிறதே இடி!
வான்விட்டு பிரியும் மழைக்கு
ஒரு நொடியாவது வழி காட்டுகிறதே மின்னல்!
உதவிட கரங்கள் இல்லாவிடினும்
மரங்களால் உயிர்களை அரவணைக்கிறதே வனம்!
தகிக்கும் வெப்பம் மணலே கதியாயினும்
கள்ளிக்கு ஈரம் சுரக்கிறதே பாலை!
இயற்கை என்னும் பள்ளியில் அனைத்தும் ஆசானாக
ஆறறிவு மனிதனோ இன்றும் கற்கும் மாணவனாக!!
– மீனாட்சி வெங்கடேஷ்