எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோருக்கான, பிரத்யேக சிறப்பு திட்டமாக, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.
உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகைக் கடை, வாணிபப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை, அழகு நிலையம் என எந்த தொழிலாக இருந்தாலும், மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும்.
மொத்த திட்டத் தொகையில், மானியம் 35 சதவீதம். மானிய உச்சவரம்பு 1.50 கோடி ரூபாய். கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுதும், 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் முனைவோர் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும், 35 சதவீதம் மானியம் உண்டு.
மொத்த திட்டத் தொகையில், 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக, முன்முனை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற, திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.in தளத்தில், இணையம்வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு, தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள், மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும்.
தகுதி உள்ளவர்கள், இத்திட்டத்தில் பயன்பெற, மாவட்டத் தொழில் மையங்களை அணுகலாம்.