தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஓட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு எந்த விதமான மருத்துவ தேவைகளாக இருந்தாலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையே முதலுதவிக்காக பயன்படுத்த வேண்டி உள்ளது. அதன் பின்னர் மருத்துவமனை என்று பார்க்கப் போனால் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேராவூரணி அரசு பொது மருத்துவமனையையோ அல்லது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையையோ நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் பல நேரங்களில் மருத்துவ உதவி கிடைக்கப்பெறுவதற்காக இங்கு உள்ள கிராமங்களில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் பல கிலோ மீட்டர்கள் தாண்டி வருவதால் நேர விரையம் ஏற்பட்டு காப்பாற்றப்படுவதற்கு உண்டான பொன்னான கால இடைவெளி குறைகிறது.
நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக திரு சிவகுரு பிரபாகரன் இஆப அவர்களின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கி உள்ளார். இதன் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் ஆம்புலன்ஸிற்காக காத்திருக்கும் நேரம் குறைவதோடு அவசர உதவி தேவைப்படும் நபரை காப்பாற்றுவதற்கான பொன்னான கால இடைவெளியும் அதிகமாகிறது.
ஒன்பது கிராமங்களுக்கு பொதுவாக ஓட்டங்காட்டில் நிறுத்தப்படும் இந்த ஆம்புலன்ஸ் இலவச சேவை இல்லை என்றாலும் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் அபரிவிதமான கட்டணம் செலுத்த தேவையில்லை. எரிபொருளுக்கு ஆகும் செலவை மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் விரைந்த சேவை என்ற நோக்கில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் சேவையை பொது மக்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கெடுத்துக் கொண்டனர்.
ஆம்புலன்ஸ் தேவைக்கு : 70101 08108