தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22 -ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க. செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், 17-ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி 15.09.2023 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 19.09.2023 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளன.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் பள்ளி. கல்லூரி மாணவ. மாணவியருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000- இரண்டாம் பரிசாக ரூ.3.000- மூன்றாம் பரிசாக ரூ.2.000- என்ற வகைப்பாட்டில் வழங்கப்படும்.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக் கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000-வீதமும் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒரு பள்ளிக்கு ஒருவர் எனவும். ஒரு கல்லூரிக்கு இருவர் எனவும் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டி நடைபெறும் இடம், நேரம், தலைப்பு, விதிமுறைகள் ஆகியவை பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்/கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.. போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர். கல்லூரி முதல்வரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04362-271530) தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.