தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திரைப்பிரபலங்கள் அஜித், விஜய், பார்த்திபன், இமான் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளனர். அவர்கள் சார்பில் வீடு வீடாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் பாலா பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மழையால் என்னால் வெளியில் வர முடியவில்லை. இல்லையென்றால் முன்னரே ஏதாவது பண்ணியிருப்பேன். அவரவர் தேவைக்கேற்ப வாங்கி கொள்ளும் வசதியாக 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளேன். 2015 அப்போ உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. இப்போ என்கிட்ட 2 லட்சம் காசு இருந்தது. அதை அப்படியே கொடுத்துள்ளேன். வந்தாரை வாழவைக்கும் சென்னை. என்னையும் வாழவைத்தது சென்னை தான். நம்மல பாத்துகிட்டது சென்னை தான். அதனால் நம்மால் முடிந்ததை செய்து இந்த ஊரை பார்த்துக்க வேண்டும்” என்றார். பாலாவின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.