கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றதில் இந்த கொள்ளையை தர்மபுரியை சேர்ந்த விஜய் என்பவர் செய்திருப்பது தெரியவந்தது.
விஜய் சமீப காலமாக, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி இருந்ததும் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜயின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விஜயின் மனைவி நர்மதாவிடமிருந்து நவம்பர் 30ம் தேதி 3.2 கிலோ நகைகளை போலிசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்து 1.35 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடந்த 6ம் தர்மபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 95% மீட்கப்பட்டதாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சந்தீஷ் பேட்டியளித்திருந்த முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து காலகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
விஜயை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாள்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.