பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும், அதன் எதிரே, உணவகமும், 3 தனியார் திருமண மண்டபங்களும், குடியிருப்புகளும் உள்ளன.
ஸ்ரீநீலகண்ட பிள்ளையார் திருக்குளத்தின் தண்ணீரை வெளியேற்ற உள்ள வாய்க்காலில் இரவு நேரங்களில் தனியார் கழிவுநீர் வாகனங்களிலிருந்து கழிவுநீர் கொண்டுவந்து இந்த வாய்க்காலில் திறந்துவிடுகின்றனர். இச்சம்பவம் கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவருகிறது. யாரிடமும் புகார் கூறினாலும் எந்த பயனுமில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கழிப்பிடங்களிலிருந்து எடுத்துவரப்படும் கழிவுகளை இங்கு கொட்டுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாலையில் செல்வோர்கள், உணவகங்களுக்கு வந்து செல்கின்ற வாடிக்கையாளர்கள், பள்ளிக்கு செல்லுகின்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், குடியிருக்கும் பொதுமக்கள், என அனைவரும் தூர்நாற்றத்தில் அவதிபடுகின்றனர். இதனால் நோய்தொற்றுக்கள் உருவாகும் நிலையில் உள்ளனர்.
சமூகஆர்வலர்கள் ஏன் இந்த இடத்தில் கழிவுநீரை கொட்டுகிறாய்? என்று கேட்டதற்கு நாங்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிட்டோம். உங்க வேலையை பாருங்கள் என திமிராக மிரட்டுவதாக கூறுகின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள், மாணவ- மாணவியர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தபோவதாகவும் கூறுகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொது இடத்தில் கழிவுநீர் கொட்டும் தனியார் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுத்து இனியும் இதுபோன்ற தவறு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
– Dr.வேதகுஞ்சருளன்