தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா (50). எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் சென்னையில் பேஷன் டெக்னாலஜி பிரிவில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மகன், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை கரூர் மாவட்டம் குளித்தலை, மதுரை, திருச்சி அரியமங்கலம், துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக முத்தரசு பணியாற்றி வந்தார். பின்னர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தரசின் வங்கி கணக்கு மற்றும் வாகனங்கள், சொத்து மதிப்புகளை ஆய்வு செய்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. 1.4.2014 முதல் முத்தரசு, தனது பெயர் மற்றும் மனைவியின் பெயரில் ரூ.35,37,548 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, 31.03.2020 ம், ஆண்டு கணக்குப்படி முத்தரசு மற்றும் அவரது மனைவி பெயரில் வீடுகள், வீட்டுமனைகள் என ரூ.1,38,47,548 என்ற அளவில் சொத்து மதிப்பு இருந்துள்ளது. இதில் அவர் பெற்ற மாத ஊதியம், அவரது செலவுகள் போக எவ்வளவு சொத்து மதிப்பு இருக்க வேண்டுமோ அதற்கு மேல் அதிகமாக சொத்து மதிப்பு இருப்பது தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது. வருமானத்திற்கு, அதிகமாக (104.07 சதவீதம்) ரூ.80,29,450 சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 4ம்தேதி டிஎஸ்பி முத்தரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி உள்பட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் (05.12.2023) காலை திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள பிரபல குடியிருப்பில் வசித்து வரும் டிஎஸ்பி முத்தரசு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. இதில், 25க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களும், 8க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும், வங்கி லாக்கர் சாவிகளும் சிக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக வீட்டில் இருந்த டிஎஸ்பி முத்தரசிடம் லஞ்சஒழிப்பு துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். வங்கி லாக்கர்களில் என்னென்ன உள்ளது என்பது குறித்து விரைவில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்த உள்ளனர். அப்போது மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நவக்கொல்லைக்காடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு அண்ணன். இவர் கடை குட்டி காரைக்குடி அழகப்பா யுனிவர்சிட்டி பிஎஸ்சி வரை படித்தார். இவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏற்கனவே இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உறவுக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் தவறு செய்தால் கூட உடனடியாக திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து ஒருதலைபட்சமாக செயல்பட சொல்வார். திருச்சிற்றம்பலம் காவலர்களும் உயர் அதிகாரி என்று அவருடைய பேச்சை தட்டாமல் செய்வார்கள் இன்று வரை இதுபோல் தான் நடந்து கொண்டிருக்கிறது திருச்சிற்றம்பலம் காவல் நிலையம்.