குளத்தை வெட்ட சொன்னால் கிணற்றை வெட்டியுள்ளார்கள்.
குளத்தை சுற்றி நடைபாதை போட சொன்னால் ஒத்தையடி பாதையை போட்டுள்ளார்கள்..
வெள்ளம் போகும் வரத்து வாரியை கட்ட சொன்னால் தண்ணி போகுமளவுக்கு வாய்க்காலை கட்டி உள்ளார்கள்.குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொன்னால் மேற்கொண்டு குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இந்தக் குளத்தை லேண்ட் மார்க்காக உருவாக்க சொன்னால் சூசைட் பாயிண்ட்டாக உருவாக்கியுள்ளார்கள். மின்கம்பத்தை நடை பாதையின் நடுவில் வைத்து நடைபாதை அமைப்பது தான் கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் திட்டமா? என கொதிக்கிறார் கருத்தாயுதக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் துரை குணா.
எழுத்தாளர் துரை குணாவின் போராட்ட களம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். கூட்டம் இருக்காது ஆனால் புதுக்கோட்டையே பதட்டமாக இருக்கும். நான்காண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் கலெக்டர் வேலை காலியா இருக்கு வேலைக்கு வர்றவங்க வரலாம் நான் தான் நேர்முகத்தேர்வு செய்கிறேன் என ஒரு போஸ்டர் மூலம் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாற்றியவர்.இப்பொழுது நாடாளுமன்றம் தேர்தல் நடக்கும் வேளையில் காரி துப்பும் போராட்டத்தை அறிவித்து புதுக்கோட்டையை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். காரி துப்பும் போராட்டம் சரி, அதென்ன வாஸ்து முறை படி காரி துப்புவது என்பதை போஸ்டரில் கவனித்தோம்..
மின்கம்பத்தை நடுவில் வைத்து நடைபாதை அமைக்க புதுமையான திட்ட அறிக்கையை தயார் செய்த பொறியாளரை நினைத்து வருந்தி கிழக்கு புறமாக திரும்பி 3 முறை காரி துப்பப்படும்.
பங்களா குளம் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை விரிவு படுத்த நிர்வாகத் திறனற்ற பேரூராட்சி செயல் அலுவலர் நினைத்து வருந்தி மேற்கு புறமாக திரும்பி 5 முறை காரி துப்பப்படும்.
53 லட்சம் நிதி மதிப்பீட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணியை கண்காணிக்காமல் கவரை வாங்கிக் கொண்டு கையெழுத்தை மட்டும் போடும் ஆலங்குடி உதவி பொறியாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளரை நினைத்து வருந்தி வடக்கு புறம்பாக திரும்பி 9 முறை காரி துப்பப்படும்.
பங்களா குளத்திற்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்களையும் குளம் நிரம்பி நீர் வெளியேறும் வடிகால் வாய்க்கால்களையும் ஆரம்ப கால அளவுகளின் படி புனரமைத்து பாதுகாக்காத பேரூராட்சி நிர்வாகத்தை நினைத்து வருந்தி தெற்கு புறம்பாக திரும்பி 12 முறை காரி துப்பப்படும்.
அடேங்கப்பா துப்புவது இப்படியா என்று பார்த்தால் இந்த செய்திக்கு கீழே.. எங்களோடு இணைந்து யாரேனும் இந்த சீர்கேட்டை காரி துப்ப விரும்பினால் மருத்துவமனையை போல் செயல்படும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காசநோய் சளி பரிசோதனைகளை செய்துவிட்டு எங்களோடு இணைந்து கொள்ளலாம். என்று குறி போன்றை சொல்லி உள்ளார்.
இந்தப் போராட்டத்தை நடத்தும் எழுத்தாளர் துரை குணாவிடம் பேசினோம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி எதிரில் உள்ளது தான் இந்த பங்களா குளம். இந்த குளத்திற்கு வரலாறு உண்டு. இந்த குளம் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் குளம்மாகவும் நிலத்தடி உயர்வதற்கு நீராதாரமாகவும் விளங்கி வந்திருக்கிறது. முதலில் இந்த குளத்திற்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்களை அடைத்து கடைகள் கட்டி தனி நபர்களுக்கு கொடுத்தார்கள் அதிகாரிகள். பிறகு குளத்துக் கரையை கொஞ்சம் கொஞ்சமாக மண் போட்டு மூடி குளத்துக்கரையில் தர வாடகை கடையென பெயரிட்டு தனி நபர்களுக்கு தாரைவாத்தார்கள். இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இப்ப குளம் இருக்கும் இடமே குறுகலாகிவிட்டது. இது இப்படி இருக்க.. கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டு குளத்தில் உள்ள மண்ணை வெட்டி சுமார் 20 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்துள்ளார்கள்.
ஒரு பெரிய டிப்பர் மண் லோடு 8000 வீதம் 250 டிப்பர் மண் குளத்திலிருந்து வெளியாகி உள்ளது. முன்பு குளமாக இருந்தது இப்பொழுது கிணறாகிவிட்டது.
எங்களை கடந்த 3ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து இருந்தார்கள். நாங்கள் மதித்து மரியாதை நிமித்தமாக வெத்தல பாக்கு தாம்பூலத்துடன் பேச்சு வார்த்தைக்கு போனோம். நாங்கள் கேட்ட கோரிக்கைகளுக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. அவர்கள் பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே உயர் அதிகாரிகளை கொண்டு வருகின்ற 5 ஆம் தேதி பேசுவோம் என அழைப்பானை கொடுத்தார்கள். பிறகு உயர் அதிகாரிகளுக்கு வைத்துப் போக்கு ஏற்பட்டதால் வருகின்ற 12ஆம் தேதி பேசலாம் என மறுபடியும் அழைப்பானை அனுப்பி உள்ளார்கள். அதிகாரிகள் இதை தட்டி கழித்து மழுப்ப பார்க்கிறார்கள் நான் விடமாட்டேன் எனக்கு வழக்கு கைது என்பது பழகிப்போன ஒன்றுதான். வருகின்ற 12ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன் அந்த உயர் அதிகாரியின் பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்ட வடிவம் மாறும் என முடித்துக் கொண்டார்.