ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும் விசாரித்து முடித்தார் அனைத்து விசாரணைகளையும் பதிவுகளாக மேற்கொள்ளுமாறு இன்ஸ்பெக்டரிடம் கூறியவர் மீதமுள்ள மற்ற வேலைகளை உடனடியாக முடித்து அனைத்து தகவல்களையும் தனக்கு அனுப்புமாறு உத்தரவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி மீண்டும் கமிஷனர் ஆலுவலகம் சென்று சேர்ந்தார்.
ஜான் போல் துரு துரு என்று வேலை செய்யாவிட்டாலும் தனக்கே உரித்தான பாணியில் தன் வேலையை செய்பவர் முத்து. ஆனால் தற்போது ஒரு வார விடுமுறை என்ற காரணத்தால் தன் குடும்பத்தினருடன் ஜான் வீட்டிற்கு புறப்பட ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
மறுமுனையில் பல ஆண்டுகள் கழித்து முத்துவின் குடும்பத்தினரை சந்திக்கவிருக்கும் மகிழ்ச்சியில் தடபுடலாக விருந்து ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார் கிறிஸ்டினா நிஜ வாழ்க்கையில் நிதர்சனத்தை எப்போதும் தவற விடாத ஜானை பாதிரியாருடன் உரையாடிய பிறகு குற்ற உணர்ச்சிகள் அனைத்தும் மேலோங்கி நிஜ வாழ்வில் இருந்து சற்று தூரமாக விலக்கி வைத்திருந்தது. பலதரப்பட்ட சிந்தனைகளோடும் கனத்த மனத்தோடும் வீடு வந்த சேர்ந்த ஜான் கிறிஸ்டினாவிடம் எதுவும் பேசாமல் மனச்சோர்வில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
முத்துவின் மகளுக்கு நேரம் தவறாமை என்ற பழக்கம் சிறு வயதில் இருந்தே வேரூன்றி இருந்த காரணத்தால் அனைவருக்கும் முன்னால் முதல் ஆளாக கிளம்பி வீட்டின் நடுவில் வந்து அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். தன் அறையில் இருந்து கிளம்பி வெளியே வந்த முத்து தன் மகளைப் பார்த்து புன்னகையுடன் “என்னம்மா வழக்கம்போல நாங்க தான் லேட்டா?” என்றார். “ஆமாப்பா நீங்களாவது பரவால்ல, ஏன் அம்மா கூட பரவால்ல ஆனா உங்க பையன் கிளம்பறதுக்கு எல்லாம் ஒரு மணி நேரம் ஆக்குறான். என்னதான் பண்றான்னு தெரியல. இருக்கிற எல்லா டிரெஸ்ஸும் எடுத்து ஒன்னொன்னா போட்டு பாத்துட்டு இருக்கான். ஒரு முடிவுக்கு வரவே மாட்டேங்குறான். பொம்பளைங்களே தேவலாம் போல இருக்கு.” என்று நக்கல் அடித்துக் கொண்டிருந்தார் முத்துவின் மகள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்துவின் மனைவி அறையில் இருந்து வெளியே வந்து “அப்பாவும் பொண்ணு சேர்ந்து என் பையனை கிண்டல் பண்றீங்களா?. வெளியில கிளம்புரோம், நீட்டா கிளம்பனும்னு நினைக்கிறான். உன்னை மாதிரியா கைல கிடைச்சதெல்லாம் தூக்கி மாட்டிக்கிட்டு ஆளுக்கு முன்னாடி வந்து உக்காந்து எல்லாரையும் கிண்டல் பண்றது” என்று கூறிக் கொண்டிருக்கையில் முத்துவின் மகனும் ஒரு வழியாக கிளம்பி வெளியே வந்தார். “இங்கே பார் அவனே வந்துட்டான். தம்பி இங்க வா” என்று அருகில் அழைத்த முத்துவின் மனைவி தனது மகளுடன் அருகில் நிக்க வைத்து “நீங்க எப்படி டிரஸ் பண்ணி இருக்கீங்க மேடம்? உங்க தம்பிய கொஞ்சம் பாருங்க” என்று கூறியவுடன் முத்துவின் மகள் குறுக்கிட்டு “அம்மா டிரஸ் என்பது நம் உடலை மறைக்கத்தான். அது போக அதை நமக்கு பிடித்த மாதிரி செய்து கொள்கிறோம். இவனுக்கு பிடித்தது இவன் போட்டு இருக்கிறான், எனக்கு பிடித்ததை நான் போட்டு இருக்கிறேன். இதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டுக் கொண்டிருக்கையில் முத்துவின் மகன் குறுக்கிட்டு “இல்ல இல்ல டிரஸ் நமக்கு புடிச்ச மாதிரி மட்டும் இருக்க கூடாது மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் அப்பதான் நம்ம மேல ஒரு நல்ல மதிப்பு வரும். ஆள் பாதி, ஆடை பாதி” என்றார். “இப்படியே பேசிக்கிட்டே இருந்தோம்னா சாயந்திரம் ஆயிடும். அப்புறம் நம்ம வீட்ல சமைச்சு சாப்பிடலாம் ஓகேவா ?”என்றார் முத்து. அனைவருக்கும் குபிரென்று சிரிப்பு வந்தது.
“சரி சரி வாங்க கிளம்பலாம் டைம் ஆயிடுச்சு.” என்று கூறிவிட்டு ஒரு வழியாக அனைவரும் கிளம்பி ஜானின் வீட்டை வந்து அடைந்தனர்.வண்டி சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்த கிறிஸ்டினா “வாங்க வாங்க” என்று அனைவரையும் வரவேற்றார். முத்துவின் மகளை கட்டி அணைத்து “எப்படிடா இருக்க?” என்று கேட்டபோது முத்துவின் மனைவிக்கும் கிறிஸ்டினா விற்கும் ஒரு சேர கண்கள் கலங்கி குரல் தளதளத்தது. “நல்லா இருக்கேன் ஆன்ட்டி நீங்க எப்படி இருக்கீங்க?, அங்கிள் எப்படி இருக்காங்க?” என்று ஒருவரை மாற்றி ஒருவர் நலம் விசாரித்தவாறு வீட்டிற்குள்சென்றனர். அனைவரையும் சோபாவில் அமர வைத்த கிறிஸ்டினா சமையல் கட்டிற்குள் சென்று அனைவரும் பருகுவதற்காக ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழச்சாற்றை எடுத்து வந்தார். “எடுத்துக்கோங்க” என்று அனைவருக்கும் நடுவில் வைத்துவிட்டு முத்துவின் மகனை பார்த்து “தம்பி டிரஸ் சூப்பரா இருக்கு” என்றார்.
உடனே முத்துவின் மகன் தனது அக்காவை பார்த்து காலரை தூக்கி விட்டுக் கொண்டு ஏளன புன்னகை விடுத்தான். அதைப் பார்த்த முத்துவின் மகள் உடனே கிறிஸ்டினாவிடம் “ஏன் ஆன்ட்டி என்னோட டிரஸ் நல்லா இல்லையா?” என்றார். “உன்னோடதும் நல்லா தான் இருக்கு” என்று கிறிஸ்டினா கூறியதும் தனது சகோதரனின் சிரிப்புக்கு பதில் சிரிப்பு மூலம் பதில் அளித்தார் முத்துவின் மகள். “உங்க பிரச்சனை நிறுத்த மாட்டீங்களா?” என்று குறிப்பிட்ட முத்துவின் மனைவி கிறிஸ்டினாவிடம் “வீட்டில் இருந்து இரண்டு பேருக்கும் இதுதான் பிரச்சனை யார் டிரஸ் நல்லா இருக்கு? என்று ஒரே விவாதம்“ என்றார்.
பேச தொடங்கிய முத்து “எங்கம்மா ஜான காணவில்லையே?!” என்றார். “அவர் வெளியில போயிட்டு வந்து படுத்தவர் தான். இன்னும் எழுந்திருக்கவில்லை. நீங்களே அறையில் பாருங்கள்.” என்று கூறிவிட்டு மீண்டும் ஜான் மனைவி மற்றும் மகன், மகளுடன் பேச தொடங்கினார் கிறிஸ்டினா. ஜானின் பெயரை உச்சரித்தவரே படுக்கை அறைக்குள் நுழைந்த முத்து ஜான் படுத்திருந்ததை பார்த்து அவரை மெல்லமாக எழுப்பினார்.
முத்துவின் குரல் கேட்டு மெதுவாக எழுந்த ஜான் “என்ன முத்து சார் எப்ப வந்தீங்க? மன்னிச்சிடுங்க கொஞ்சம் அசந்துட்டேன்” என்றார். “பரவால்ல பரவால்ல வாங்க” என்று படுக்கையில் அமர்ந்தார் முத்து. ஜான் முகம் கழுவி வெளியே வர ஜானும் முத்துவும் அறையிலிருந்து வெளியே வந்தனர். முத்துவின் குடும்பத்தினரும் ஜானும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கிறிஸ்டினாவின் முகத்தில் நிம்மதி கலந்த சந்தோஷத்தை பார்த்த ஜான் முத்துவிடம் “அவங்க பேசிகிட்டு இருக்கட்டும் வாங்க நம்ம வெளியில போயிட்டு வந்துடுவோம்“ என்றார். குறுக்கிட்ட கிறிஸ்டினா “சாப்பிடுற நேரத்துல எங்க போறீங்க சாப்பிட்டு போலாம் “என்றார். “இங்க பக்கத்துல தான். அஞ்சு நிமிஷத்துல வந்துவிடுகிறோம்“ என்று கூறிவிட்டு ஜான் முத்துவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
(தொடரும்…)