உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பு: சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக் கல்வித் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை செயலராகவும், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கே.வீரராகவராவ் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர், திறன்மேம்பாட்டுத்துறை செயலராக இருந்த குமார் ஜயந்த், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார் உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த பி.அமுதா வருவாய்த் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த வி.ராஜாராமன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி எஸ்.சுரேஷ்குமார், பிசி, எம்பிசி, சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலராகவும், திருவண்ணாமலை டிஆர்டிஏ திட்ட அதிகாரி சி.ஏ.ரிஷப், நிதித்துறை துணை செயலராகவும், ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் பொதுத்துறை துணை செயலராகவும், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ்.வளர்மதி சமூக நலத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.வளர்மதி, தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகத்தின் மேலாண் இயக்குனராகவும் இருப்பார்.
அரியலூர் ஆட்சியர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா உள்துறை இணை செயலராகவும், கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர் ஸ்ரவண் குமார் ஜடாவத், வீட்டுவசதித்துறை இணை செயலராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை ஆட்சியராகவும், நீலகிரி ஆட்சியர் எம்.அருணா புதுக்கோட்டை ஆட்சியராகவும், ஈரோடு வணிகவரி இணை ஆணையர் லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி ஆட்சியராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக முன்னாள் செயல் இயக்குனர் பி.பிரியங்கா தஞ்சாவூர் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிப்காட் செயல் இயக்குனர் பி.ஆகாஷ் நாகப்பட்டினம் ஆட்சியராகவும், சென்னை வணிகவரி நிர்வாகப்பிரிவு இணை ஆணையர் பி.ரத்தினசாமி அரியலூர் ஆட்சியராகவும், நிதித்துறை துணை செயலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் ஆட்சியராகவும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா கன்னியாகுமரி ஆட்சியராகவும், தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் பெரம்பலூர் ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ராமநாதபுரம் ஆட்சியராகவும், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குனர் நர்னவரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜெ.விஜயா ராணி சென்னை மாநகராட்சி கல்விப்பிரிவு இணை ஆணையராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.