ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது.
“போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து எக்காரணம் கொண்டு ஹோட்டலுக்கு சீல் வைக்கும் நிலைமையை உருவாக்காமல் ஒத்துழைப்பு கொடுத்து இதை சுமூகமாக முடிக்க வேண்டும்” என்று அவர் கூறிய வார்த்தைகள் காதுகளில் ஒழிக்க தொடங்கியது.
ஒரு நிமிடத்திற்குள் வியர்த்து கொட்டி நனைந்து போன மேனேஜர், கோர்ட் ஆர்டர் உடன் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு நடக்கத் தொடங்கிய காதரிடம் “சார் சார் நில்லுங்க. இப்போ என்ன இந்த சாமியாரை கூட்டிட்டு போய் சுத்தி காட்டணும் அவ்வளவு தானே! தயவு கூர்ந்து அரை மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் அதற்குள்..” என்று கூறிக் கொண்டிருக்கையில் குருக்கிட்ட காதர் “அதெல்லாம் சரியா வராது. இந்த அரை மணி நேரம், ஒரு மணி நேரம் டைம் எல்லாம் நீங்க எனக்கு ஆர்டர் போடக்கூடாது. எனக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி விசாரிக்க வேண்டும் என்று தெரியும். உங்கள் பாடத்தை கேட்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. நாங்கள், இங்கு எங்கள் வேலை செய்ய வந்துள்ளோம். நியாயமாக பார்த்தால் இந்நேரம் இந்த ஹோட்டலுக்கு சீல் வைத்து அனைவரையும் கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் பெயர் பெற்ற நிறுவனம் என்ற மரியாதை நிமித்தமாக ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தது தவறுதான். ஒத்துழைப்பு வழங்குவதும், வழங்காததும் உங்கள் விருப்பம். எப்படி இருந்தாலும் நான் என் கடமை செய்ய தான் போகிறேன். நீங்கள் கூறும் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு உட்கார்ந்து இருந்து உங்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இது ஒன்று மட்டும் தான் உங்களுக்கு வேலை ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. ‘இவரை அழைத்துச் சென்று காட்ட முடியாது’ என்று சட்டம் பேசும் நீங்கள், நாளைக்கு அனுமதி இல்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்தார்கள். என்று சட்டத்தை எங்கள் மீது பாய்ச்ச திருப்பி விட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?!. ஆகவே நாங்களும் சட்டப்படி முறையான அனுமதி பெற்ற பிறகு இங்கு வந்து விசாரணை செய்து கொள்கிறோம்”. என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினார் காதர்.
முகத்தில் சிறிய புன்னகையுடன் அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் கதாநாயகன். கதாநாயகன் மீது தன் கவனத்தை திருப்பி மேனேஜர் “சார் சார், நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க. தப்புதான், ஆனா நானும் இங்க வேலைக்காரன் சார். இது என்னுடைய ஓட்டல் கிடையாது. எனக்கென்று சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை நான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இப்படி ஒரு அசம்பாவிதம் இதற்கு முன்னர் நடந்ததில்லை. பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பேசி விட்டேன். அவரிடம் கொஞ்சம் எடுத்து கூறுங்கள். உங்களை நான், நீங்கள் எங்கு கேட்கிறீர்களோ அங்கு அழைத்து சென்று காட்டுகிறேன்” என்று கெஞ்சினார்.
மேனேஜரின் கெஞ்சலை ஏற்றுக் கொள்ளும்படியாக தலையசைத்த கதாநாயகன் “சரி விடுங்க, நான் பேசுறேன். ஆனா, சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் கேட்கிறேனோ அங்கெல்லாம் என்னை கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும்”. என்று கூறியதும் வேகமாக தலையசைத்தார் மேனேஜர்.
வெளியே நடந்து சென்று கொண்டிருந்த காதரை நோக்கி வேகமாக நடந்து சென்ற கதாநாயகன், அவர் அருகில் சென்று “பரவால்ல காதர், நல்லாவே சுச்சுவேஷன் ஹேண்டில் பண்றீங்க. ஐ லைக் இட். சரி வாங்க, மேனேஜர் ஒத்துக்கிட்டார். நீங்கள் அந்த அறைக்கு செல்லுங்கள். நான் மேலே செல்கிறேன். டைம் இஸ் ரன்னிங் அவுட்டு கொஞ்சம் சீக்கிரம்” என்று கூறிக் கொண்டே இருவரும் வேகமாக மீண்டும் திரும்பி வந்தனர்.
மேனேஜரிடம் “வாருங்கள் செல்வோம்” என்ற கதாநாயகன், காதரிடம் கண்ணசைவில் அறைக்குள்ளே செல்லும்படி கூறினார்.
சுமார் அரை மணி நேரம் சம்பவம் நடந்த அறையை எங்கிருந்து எல்லாம் பார்க்க முடியுமோ அத்தனை இடங்களுக்கும் மேனேஜரை கூட்டிச் சென்று கால் கடுக்க வைத்தார் கதாநாயகன். தனது வேலை நேரம் முழுவதும் சுற்ற வேண்டிய ஒட்டு மொத்த இடத்தையும் அரை மணி நேரத்திற்குள் சுற்றி வந்ததால் சோர்ந்து போன மேனேஜர் கதாநாயகனை பார்த்து “சாமி சார், உங்களுக்கு என்ன தான் வேணும்? என்ன தேடுகிறீர்கள்? என்று தெளிவாக சொன்னால் அந்த இடத்திற்கு மட்டும் செல்லலாமே!” என்று கூறியவுடன் “அப்படியா! சரி வாருங்கள். அந்த அறைக்கு நேர் எதிரே பின்பக்கமாக உள்ள அறையை திறந்து விடுங்கள்” என்றார் கதாநாயகன்.
இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம். “வாருங்கள்” என்று கூறிய மேனேஜர் அந்த குறிப்பிட்ட அறையின் கதவை திறந்து விட்டார்.
“கடைசியாக இங்கே எப்போது ஆட்கள் இருந்தார்கள்?” என்றார் கதாநாயகன்.
“ஆட்கள் இங்க முழுசா தங்கி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்காக இருவர் 5 மணி நேரங்கள் தங்கினார்கள். இது தொடர்பாக அனைவரது பெயர்கள் மற்றும் அவர்கள் இங்கு தங்க பயன்படுத்திய அடையாள அட்டைகளின் தகவல்கள் போன்ற அனைத்தும் போலீசாரிடம் கொடுத்து விட்டேன். நீங்க எதுக்கு சாமி இதெல்லாம் கேக்குறீங்க?” என்றார் மேனேஜர்.
“அது சரி, எனக்கு எதுக்கு அதெல்லாம்? இல்லையே அறை பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கிறது அதனால் தான் கேட்டேன். இங்கு ஆட்கள் இல்லை என்றால், நான் ஒரு நாள் இங்கே தங்கிக் கொள்ளலாம் அல்லவா?” என்று கதாநாயகன் கூறியதும் மேனேஜரின் முகம் தர்ம சங்கடத்தில் சுருங்கியது.
அதை கவனித்த கதாநாயகன் “நீங்க நினைக்கிற மாதிரி ஓசியில் எல்லாம் இல்லை. நான் இங்கு தங்குவதற்கு கட்டாயமாக காசு கொடுத்து விடுவேன். கவலைப்படாதீர்கள்” என்று கூறி மேனேஜரை ஆசுவாசப்படுத்திய கதாநாயகன், “தயவு செஞ்சு நான் இப்படி பின்னாடி வந்துடறேன். என்னால நடக்க முடியல” என்று மேனேஜரிடம் கூறியதும் பேச தொடங்கிய மேனேஜர் “சாமி பின்னாடி கதவும் சாவி போட்டா தான் திறக்கும். அதுவும் உள்ளே இருந்து நான் தான் திறந்து விடனும். ஆனால் பின்னாடி போனால் வெளியே வருவதற்கு சுற்றி தான் வர வேண்டும். நேரடியாக அந்த பக்கம் செல்ல முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்கிறேன், கதவை திறந்து விடுகிறேன். நீங்கள் இந்த பக்கமாக வாருங்கள். நான் அதற்குள் அந்த பக்கம் சென்று உங்களுக்கு அந்த அறையின் கதவை அங்கிருந்து திறந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு பின் கதவை திறந்து கதாநாயகனுக்கு வழி கொடுத்தார் மேனேஜர். கதாநாயகன் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.
(தொடரும்…)