தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவரது வழிகாட்டியான திரு.அண்ணாதுரை அவர்களின் பெயரில் 1970ல் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதை மாநில ஆளுநர் திரு.சுகாத்தியா அவர்களால் 1977ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய கரும்பு விவசாயிகளை கொண்டது. ஒரு காலத்தில் பல விவசாயிகளை கொண்ட இந்த சர்க்கரை ஆலை தற்போது நலிவடைந்து கொண்டே வருகிறது காரணம் அதிகாரிகளின் அலட்சியமே. இது தொடர்பாக தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் ராமசாமி மற்றும் செயலாளர் தோழிகிரிபட்டி திரு.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செயலாளர் அவர்களை சந்தித்தபோது அவர் நம்மிடம் தெரிவித்தது. பழம் பெருமை வாய்ந்த இந்த சர்க்கரை ஆலையை தலைமை நிர்வாகி திரு.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகிய மூன்று பேரும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டனர் என்று தெரிவித்தார்.
மேலும் ரூபாய் 1000 வீதம் 20,000 விவசாயிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த 1000 ரூபாய்க்கு எந்தவித வட்டியோ அல்லது பங்கு ஈவோ கிடையாது. முன் கூட்டியே எங்களுக்கு கரும்பு வெட்ட ஆணை வழங்கினால் வெட்டு கூலி மிச்சமாகும். முன்பு இருந்த திமுக ஆட்சியில் வெட்டு கூலியும், போக்குவரத்து செலவும் ஆலையின் நிர்வாகமே ஏற்றது. தற்போது டன்னுக்கு விலை குறைவாக கொடுப்பதால் விவசாயிகள் பலரும் மரவள்ளி சாகுபடிக்குச் சென்று விட்டனர். ஒரு காலத்தில் குடியரசு தலைவரிடம் சிறந்த ஆலைக்கான விருது பெற்றது. தற்போது நலிவடைந்து வருகிறது. 1970களில் எங்களிடம் பெற்ற 1000 ரூபாய்க்கு ஒரு வீட்டுமனை வாங்கி இருந்தால் இன்று பல லட்ச ரூபாய் எங்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் இன்று எங்களுக்கு கிடைத்திருப்பது மன வேதனையே என்று முடித்தார்.
27.11.24 ல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு சர்க்கரை கழக 49வது பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும் மேலாண்மை இயக்குநருமான அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார். 100 விவசாயிகளிடம் வாங்கப்படும் கரும்பை கொண்டு 60 விவசாயிகளுக்கு மட்டுமே பணம் வழங்க முடிகிறது. மேலும் விவசாயிகள் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி குறைவதால் தான் தனியார் ஆலைகள் மூடப்படுகின்றது என்று பேசினார். அதிகாரிகள் தங்களின் அதிகார செலவையும், அலட்சியத்தையும் குறைத்துக் கொண்டால் கரும்பு உற்பத்தியும், விவசாயிகளும் அதிகமாவார்கள் என்று விவசாயிகளில் சிலர் கூறினார்கள்.
மேலும் மகாராஷ்டிராவில் கரும்பு உற்பத்தியும், சர்க்கரை ஆலையும் லாபத்தில் இயங்குகின்றது. இதை தமிழக முதல்வர் கவனிப்பார் என்று நம்புகிறோம் என்று முடித்தார்கள். மக்களின் மனவோட்டத்தை முதல்வர் கவனிப்பாரா?