புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிபட்டி கிராமத்தில் கடந்த தீபாவளி மறுநாள் முத்தரையர் சமூகத்தை சார்ந்த இரண்டு இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்று சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் அகப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்ய கடமைப்பட்டிருந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் சம்பந்தப்பட்ட தோப்பின் உரிமையாளர்களை கைது செய்யாமல் வேறு ஒரு நபர்களை கைது செய்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததோடு அல்லாமல் உண்மையான குற்றவாளிகளின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு கொடுக்காமல் பாதுகாத்திருக்கிறார்.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் உயிரிழந்த இரண்டு இளைஞர்கள் உடலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் கிடந்ததுதான் அங்கு உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியது. எனவேதான் அங்கு இருக்கக்கூடிய சமூக கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து பேராசிரியர் ஆறுமுகம் தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆக போராட்டம் நடந்தால் உண்மை வெளியே வந்து விடும் என்பதை தெரிந்து கொண்ட ஆய்வாளர் சுகுமாரன் இந்த போராட்டத்தை நிறுத்தி பிரச்சனையை வேறு திசை நோக்கி நகர்த்தி ஆறுமுகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அங்கு இருக்கக்கூடிய போலீஸ் புரோக்கர்களை பிடித்து ஆறுமுகத்துக்கு யார் எதிரான நபர்களோ அவர்களை அழைத்து ஆறுமுகத்தை சிக்க வைக்க ஒரு ஏற்பாடு செய்து அந்த ஏற்பாட்டையும் கனக்கச்சிதமாக முடித்திருக்கிறார்.
பேராசிரியர் கோ.ஆறுமுகம் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.இவர் இயற்பியல் பிரிவில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பல தமிழ் ஆய்வு கட்டுரைகள் கவிதை நூல்கள் எழுதியுள்ள தமிழ் பற்றாளர். இந்த நிலையில் பேராசிரியர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த நிலையில் நடுவர் நீதிமன்றம் அழைத்துச் சென்றுள்ளார்.கந்தர்வகோட்டை நடுவர் மன்ற நீதிபதி, நடந்த உண்மைகளை அறிந்து பேராசிரியரை சிறைக்கு அனுப்பாமல் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளார். இதனால் ஆய்வாளர் சுகுமாரன் மேலும் கடுப்பாகியுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பேராசிரியர் தனது செல்போனை வாங்க காவல் நிலையத்துக்கு சென்ற போது காவல் ஆய்வாளர் சுகுமாரனும் உதவி ஆய்வாளர் வீரபாண்டியனும் கடுமையாக தாக்கியதில் பேராசிரியருக்கு நான்கு பற்கள் உடைக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு இப்போது வீடு திரும்பி உள்ளார்.
ஒரு கண்ணியமிக்க பேராசிரியரை ஒரு தமிழ் பற்றாளரை சைக்கோ குணத்தோடு வஞ்சகம் தீர்க்கும் காவல் ஆய்வாளர் சுகுமாரன் யார் என்று விசாரித்த போது? இவர் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் என தெரிய வருகிறது. இவரது மனைவி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர் பட்டுகோட்டையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த போது அப்பகுதியை சார்ந்த ஒரு வழக்கறிஞரை தாக்கியதால், பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றத்தை புறக்கணித்து சுகுமாரனை கண்டித்து போராட்டம் நடத்தியது. அதன் விளைவாக சுகுமாரன் தஞ்சாவூருக்கு பணி மாறுதலாகி சென்றுள்ளார். பின்பு சுகுமாரன் பணி உயர்வு பெற்று திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளராக சென்றுள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் இருந்தபோது அங்கே ஒரு பெண்ணுடன் குஜாலாவாக இருந்தது, வெளியே தெரிய வர, அங்கிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் எங்கு இருந்தாலும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எனக்கு சொந்தக்காரர் எனது சாதிக்காரர் என சொல்லி எல்லோரையும் மிரட்டிக்கொண்டு பணம் பறிக்கும் வேலையில்தான் முழு நேரமும் ஈடுபடுவார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டு.
பேராசிரியர் விவாகரத்தை வெளியே கொண்டு வந்த காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் துரை குணா தெரிவிப்பது..
முதல்ல நாங்க காவல்துறைக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிஞ்சுக்கணும், காவல் ஆய்வாளர் சுகுமாரன் அவர்கள் ஒரு தவறை மறைப்பதற்கு பல பல தவறுகளை செய்து கொண்டு வருகிறார்.பேராசிரியர் ஆறுமுகத்தை கந்தர்வகோட்டை நடுவர் நீதிமன்றம் சொந்த ஜாமினில் விட்ட பிறகும், ஆறுமுகத்தின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அடிப்பது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? பல்லே இல்லாத ஆறுமுகத்தை, நான் எப்படி, பல்லை உடைக்க முடியும்? என மேல் அதிகாரிகளிடம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தெரிவித்திருக்கிறார்? நாம விசாரிச்ச வகையில் பேராசிரியர் ஆறுமுகத்திற்கு சர்க்கரை நோயால் கீழே இருக்கக்கூடிய நாலு பற்களும் மிகவும் பலவீனமாக இருந்துள்ளது. அந்த வகையில் தான் அவர் அடித்த போது விழுந்திருக்கிறது. சம்பவத்தின் போது சிசிடிவி கேமரா ஆய்வுகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆறுமுகத்தின் பெயரில் மனு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு வேறு திசை நோக்கி வைத்துள்ளார்கள்.
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு சுகுமாரன் அவர்கள் வந்த பிறகு அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் எஸ்பி ஆபிஸில் கொடுத்த புகார் மனுவை விசாரிக்கவே ஒரு தனி கமிஷன் அமைக்க வேண்டும்? தேவையில்லாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் பெயரையும் இழுத்து உள்ள விடுகிறார், இதனால் அரசுக்கும் அமைச்சருக்கும் மிகப்பெரிய அவமானங்களை தேடித் தருகிறார்.
கந்தர்வகோட்டை பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் முயல் வேட்டையின் போது மர்மமான முறையில் இறந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையில் தொடர்புடைய முக்கியமான நபர்கள் தொடர்ந்து காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை கண்டறிந்து முளையிலே கில்லாவிட்டால் விரைவில் ஆளும் அரசுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும்..