தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. இது தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் அண்ணாநகர் முதல் புறவழிச்சாலை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மேலும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் வடிகால் அமைக்கப்பட்ட இடத்தின் மேல் அதாவது நடைாபதையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் சிலர் வியாபாரம் செய்து வந்தனர். பொதுமக்கள் கேட்டால் அரசாங்கம் எங்களுக்காக கட்டி கொடுத்துள்ளது என்று அன்பாக பொதுமக்களிடம் கூறினார்கள். சிலர் நடைபாதையிலேயே இரவு உணவகத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுமக்களில் சிலர் புகார் அளித்ததன் பேரில் நெடுஞ்சாலை துறையினர் முன் அளிப்பு வழங்கினர். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்நிலையில் 25.11.24 அன்று காலையில் நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி இயக்குநர் கீதா, உதவிப் பொறியாளர் லெட்சுமி பிரியா மற்றும் வல்லம் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தலைமையில் அண்ணாநகர் முதல் புறவழிச்சாலை மேம்பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகளை நெடுஞ்சாலை துறை ஜேசிபி மூலம் அகற்றி அவர்களின் லாரிகளில் கொண்டு சென்றனர். இதில் கடைக்காரர்கள் அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் என்று அவராலேயே சொல்லப்படுபவர். ஒரு இரும்பு கடை வைத்துள்ளார். அவர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் காவல் துணை கண்காணிப்பாளர் அதைப்பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனது கடமையை திறம்பட செய்தார் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் நெடுஞ்சாலை துறையின் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தையிலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றையும் அகற்ற வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். அதிகாரிகள் கவனிப்பார்களா இல்லை போராட்டம் நடத்தியபிறகு பேச்சுவார்த்தை நடத்துவார்களா? என்று நம்மிடம் மக்கள் கருத்து தெரிவித்தனர்.