பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் உரிய கட்டணம் செலுத்தி இந்த வாகன பாதுகாப்பு மையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்த வாகன நிறுத்துமிடம் பழைய மரக்கம்புகள், பழைய தகரங்களைக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. வலுவான காற்று மழையின்போது இந்த தகரக் கொட்டகைகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
மேலும் ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலிலேயே இந்தத் தகர கொட்டகைகள் இருப்பதால் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பட்டுக்கோட்டை ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள தகரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிட கொட்டகைகளை அகற்றிவிட்டு புதிய பொலிவான, பாதுகாப்பான, தூய்மையான, வாகன நிறுத்துமிடத்தை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.
