புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணாங்குடி கிராமத்தில் D.மஞ்சுநாத் த/பெ தேவேந்திரன் என்பவர் கண்ணாங்குடி கிராமத்தில். 99/16C, 99/17, 99/18C, 99/19C, 99/20C, 99/21C மேற்கண்ட புல எண்களில் 1.51.00 எக்டர் பரப்பளவில் கல் குவாரி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதி பெற்றுக்கொண்டு கண்ணாங்குடி கிராமத்தில் உள்ள நீர்நிலை அரசு புறம்போக்கு 96/3, 18/1 ஆகிய புலஎண்களில் 100 அடிக்கு மிகாமல் கற்களை வெட்டி எடுத்து வருகிறார்கள் இது தமிழ்நாடு கனிமவள சட்டங்களுக்கு எதிரானது என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த பசுபதி.

மேலும் அவர் கூறுகையில், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கற்களை பெரிய கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வதற்கு செங்காளூர் கிராமம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய குளம் புல எண் 157-ல் கல் குவாரியின் கழிவுகளைக் கொண்டு சட்டத்திற்கு விரோதமாக நடு குளத்தில் சாலை அமைத்துள்ளார்கள். இந்த சமூக விரோத செயல் நீண்ட நாட்களாக அக் கிராமங்களில் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கனிமவள கொள்ளையை கண்காணிக்க மற்றும் தடுக்க தவறிய வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இந்த சமூக விரோத செயலுக்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் முதல் குற்றச்சாட்டு.
D.மஞ்சுநாத் த/பெ தேவேந்திரன் என்பவர் கண்ணாங்குடி கிராம புல எண் 18/2, 18/3 ஆகிய பட்டா இடங்களில் 150 அடிக்கு மிகாமல் 2.16.0 எக்டர் பரப்பளவில் கிராவல் மண்ணை சட்டவிரோதமாக வெட்டி வெளிச்சந்தையில் விற்பனை செய்துவிட்டு. அந்த கிராவல் மண் வெட்டப்பட்ட 150 அடி பள்ளத்தாக்கில் கல்குவாரியின் கழிவுகளைக் கொட்டி பூமிக்கும் கீழே 150 அடியிலும், பூமி மட்டத்திலிருந்து 150 அடி மேலே மலை போல் கழிவுகளை குவித்துள்ளார்கள். இந்த புகார் மீது இதுவரையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கற்களை வெட்டி அதிகப்படியான எடையை சுமந்து எடுத்துச் சென்ற வாகனங்கள் மூலம் கண்ணாங்குடி கிராமம் குளவாய்ப்பட்டி சாலைகள் மிகவும் பழுதாகி படுகுழிகளாக உள்ளது. கீழையூர் கிராமம் நீர்நிலை புலஎண்.40/4 குளத்தின் அணைக்கட்டு 10 மீட்டர் தூரத்தில் இந்த குவாரி சட்டத்திற்கு புறம்பாகவும், கனிமவள சட்ட விதிகளையும் பின்பற்றாமலும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதை அனைத்தையும் புகைப்படங்களாகவும் காணொளியாகவும் நாங்கள் பதிவு செய்து உள்ளோம் விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்கிறார்கள்.
கனிமவள சட்டத்திற்கும்,விதிகளுக்கும் புறம்பாக இயங்கி வரும் குவாரியை ஆய்வு செய்து சீல் வைத்து மூட வேண்டும். அதற்காக பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி, டிப்பர் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.சட்ட விரோதமாக நடத்தப்பட்ட குவாரியின் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.அதனை கணக்கிட்டு மேற்கண்ட நபர்களிடமிருந்து வருவாய் இழப்பை வசூல் செய்யப்பட வேண்டும்.சட்டவிரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கைகளை பிரயோகிக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தி வருவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு செய்ய வேண்டும்.
உரிய தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் எதிர் மனுதாரராக இணைத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடுவோம் வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள் அந்த பகுதி கிராமவாசிகளும்…

- துரைகுணா, சமூக ஆர்வலர்
