தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இது அம்பாள்புரம், நல்லமான்புஞ்சை மற்றும் புனவாசல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் தெரு விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்தது.
கஜா புயலின் போது மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் கடுமையான சேதம் அடைந்த கடந்த 2 வருடங்களாக தெருவிளக்கு இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு பகுதி மட்டும் மதன்பட்டவூர் வரை சரிசெய்யப்பட்டு தெருவிளக்கு எரிந்து வருகிறது. மறுபுறம் நடுமனைகாடு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. பழைய இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பாரபட்சம்..? மின்கம்பிகள் ஏரிக்குள் தொங்கியவாறு உள்ளது.
மேலும் ஒருபுறம் பெரிய குளம் ஏரியும் மறுபுறம் வயல்வெளியும் உள்ளது. இதன் மத்தியில் சுமார் 10 அடிக்கும் மேல் உயரமாக உள்ள இந்த சாலை உள்ளாட்சி நிர்வாகத்தால் கொரோனா தடைகாலத்தில் புதிதாக போடப்பட்டது. தரம் இல்லாமல் போடப்பட்ட இந்த சாலை ஏரிக்கரையில் கடுமையான சேதம் அடைந்து இருபுறமும் சரிந்து உள்ளது. இரவு நேரத்தில் பாசன தேவைக்காக வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள் கடும்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். தெருவிளக்கு விவகாரத்தில் பாரபட்சம் காட்டியது மின்வாரியமா அல்லது ஊராட்சி மன்றமா? பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்லுமா சம்பந்தப்பட்ட துறை..? நிவர்த்தி செய்யுமா குறையை ..
மேலும் கடந்த டிசம்பர் மாத நமது இதழில் காணாமல் போன வடிகால் வாய்க்கால்கள் என்ற தலைப்பில் வெள்ளசேதம் குறித்து எழுதி இருந்தோம். இந்த இதழ் வெளிவரும் வரை வடிகால் வாய்க்கால்கள் சரி செய்யப்படாமல் மழைநீர் குடியிருப்பு பகுதிளில் தேங்கி உள்ளது. இதனால் பலதரப்பட்ட மழைகால நோய்களினால் பொதுமக்கள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் வடிந்து செல்ல வகை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.