சென்னையில் போலியாக வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி மோசடி செய்வதாக சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து போலி வாகன காப்பீட்டு சான்றிதழ் தயாரித்த கும்பலை சேர்ந்த 6 பேரை திருநெல்வேலியில் கைது செய்தனர்.
மாரியப்பன் என்ற நபர் மூளையாக செயல்பட்டு இன்சூரன்ஸ் ஏஜென்டுகள் உதவியுடன் பலரையும் ஏமாற்றியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, ஆன்லைன் மூலம் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன காப்பீடு பயன்படுத்தி, கமர்சியல் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஏற்றார் போல் போலி வாகன காப்பீடு தயாரித்து, குறைந்த தொகையில் பலருக்கும் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.
ஏற்கனவே இவர்களிடமிருந்து லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், 133 சவரன் தங்க நகை, 3 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான கார், ரூ. 9.54 லட்சம் போலிசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கனரக வாகனங்களுக்கு குறைந்த பிரிமியம் தொகையில் காப்பீடு பெற்றுத்தருவதாக, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்து சம்பாதித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக போலியாக வாகன காப்பீடு சான்றிதழ் தயாரித்து கொடுத்த மாரியப்பன், புதுப்பிக்கவும் தன்னையே அணுகுமாறு தெரிவித்ததால் சிக்காமல் மோசடிகளை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது. மேலும், அலுவலகம் சென்று வாகன காப்பீட்டு சான்றிதழ் வாங்கும் காலத்திலும், போலியாக தயாரித்து கொடுத்துள்ளதும் கண்டுபிடித்துள்ளனர்.
இன்சுரன்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக மாறுவதற்கு ஏற்ப, மோசடி செய்யும் விதத்தை மாற்றியதையும் விசாரணையில் மாரியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து ஏற்பட்டு போலி வாகன காப்பீடு வைத்து பணம் பெற முயலும் வாகன ஓட்டிகளையும், தன்னை அணுகினால் விரைவில் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இன்சுரன்ஸ் நிறுவனத்தை அணுகினால் இழப்பீடு தொகை கிடைக்க காலதாமதம் ஆகும் என கூறி, உடனடி இழப்பீடு வாங்கி தருவதாக கையில் உள்ள பணத்தை கொடுத்து சமாளித்து விடுவதாகவும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக போலியாக சான்றிதழ் வழங்குவதோடு, பிரச்சினை வராமல் இருக்க இழப்பீடும் கொடுத்து, இன்சுரன்ஸ் நிறுவனம் போல் செயல்பட்டு மோசடி செய்ததை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், வாகன காப்பீடு மோசடி தொடர்பாக அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடிதம் அனுப்பி தங்கள் வாடிக்கையாளரிடம் இருப்பது ஒரிஜினல் ஆவணம் தானா என, ஆய்வு செய்ய வேண்டும்‘ என கேட்டுள்ளனர். மேலும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை, தடய அறிவியல் துறை சோதனைக்கு அனுப்பினர்.
இந்த கும்பல் லட்சக்கணக்கில் போலி வாகன காப்பீடு ஆவணங்களை தயாரித்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைதான 6 பேரையும் போலிஸ் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மோசடி கும்பல் பயன்படுத்தி வந்த 6 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.