சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில் இலவச இணையதளம், இருக்கைகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிலேயே தியாகராயர் சாலை-&தணிகாசலம் சாலை சந்திப்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ. 40.79 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய தானியங்கி வாகன நிறுத்தம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதன் கட்டுமானப் பணி முடிவடைந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து பிப்.26 முதல் மக்கள் பயன்பாட்டு இந்த வாகன நிறுத்துமிடம் வந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி, சீர்மிகு நகரத் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 1,488 சதுர அடி பரப்பளவில் இந்த தானியங்கி வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் தவிர்த்து மொத்தம் 6 தளங்கள் கொண்ட இந்த நிறுத்தத்தில் தரைத்தளத்தில் அலுவலகம், வாடிக்கையாளர்கள் அறை, கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் இரண்டு தளங்களில் 222 இருசக்கர வாகனங்களும், மீதமுள்ள 4 தளங்களில் 513 கார்கள் நிறுத்தும் வகையில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருசக்கர வாகனத்தை 60 நொடிக்குள்ளும், காரை 90 நொடிக்குள்ளும் நிறுத்தவும், வெளியே எடுத்துச் செல்லும் வகையிலும் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்குமாறு கட்டப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இக்கட்டடத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வாகன நிறுத்தத்தில் கார் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20, இருசக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தில் ஓட்டுநர் காத்திருப்பு அறை, வாடிக்கையாளர்கள் காத்திருப்பு அறை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, மின்சார கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.