உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..?
என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா பெயர் பொன்னுதாயி. எனக்கு இரண்டு சகோதரர்கள் மூத்தவர் இராஜேந்திரசோழன் ஐஏஎஸ். இளையவர் சேரலாதன். அவர் ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிகிறார்.
உங்கள் சகோதரர்கள் பற்றி..?
அப்பாவுக்கு நீண்டநாள் ஆசை. அது என்னன்னா.. நம் தலைமுறையில் யாராவது பச்சை மையில் கையெழுத்து போடவேண்டுமென்று. இந்த ஆசையை நிறைவேற்ற அண்ணன் இராஜேந்திர சோழன் இரவு பகல் பாராமல் தன் கடின உழைப்பால் தமிழ் மீடியத்தில் படித்து ஐஏஎஸ் தேர்வை எழுதி இந்தியாவிலேயே முதல் மாணவராக வந்தார்.
எங்கள் அண்ணன் இராஜேந்திர சோழன் எங்களுக்கு மட்டுமின்றி இன்றைய பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருப்பது எனக்கு எண்ணற்ற மகிழ்ச்சியே.. தம்பி சேரலாதன் கடின உழைப்பால் வக்கீல் தொழிலையும் கவனித்து கொண்டு ஓட்டல்களையும் பார்த்துக் கொள்கிறார்.
பாண்டியன் ஓட்டல் பற்றி..?
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம், அகந்தாபட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்து சென்னையில் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு அம்பத்தூர் எஸ்டேட்டில் சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் நானும் என் சகோதரர் சேரலாதனும் கடையை கவனித்து கொண்டோம். படிப்படியாக முன்னேறி வளர்ச்சி அடைந்துள்ளோம்.
உங்கள் ஓட்டலில் குருமா மிகவும் ருசியாக இருக்கும். அதற்கான காரணம்…?
எங்கள் ஓட்டலில் வெளியே விற்கும் எந்த மசாலாவையும், அஜினாமோட்டாவையும் பயன்படுத்த மாட்டோம். எங்கம்மா எங்களுக்கு என்ன மசாலா அரைத்துக் கொடுத்தார்களோ.. அதைத்தான் இத்தனை காலம் நாங்க பயன்படுத்திகிட்டு இருக்கோம். எங்கள் ஓட்டல் சமையல் எல்லாம் ருசியாக இருக்க எங்கம்மா எங்களுக்கு சொல்லி கொடுத்த ஃபார்முலா தான். இந்த பாராட்டுக்கள் எல்லாம் எங்கள் அம்மாவையே சாரும்.
மரம் வளர்ப்பதில் அப்படி என்ன தீராத காதல்..?
எனது ரோல் மாடல் ஐயா அப்துல்கலாம் தான். ஐயா சொன்னமாதிரி இளைஞர்கள் கையில் தான் இந்த உலகம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பார். நானும் அதில் அதீத நம்பிக்கை உள்ளவன். நம் நாட்டு இளைஞர்களை நம்பாமல் வேறு யாரை நம்ப போறோம்..? அப்படிப்பட்ட இளைஞர்களை வைத்து ஒவ்வொரு கிராமத்தையும் தத்து எடுத்து அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் மரங்களை நட்டு அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆகும் செலவை நாங்களே ஏற்று கொள்கிறோம். எங்கள் பள்ளி கூட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து “களம் காப்போம் 96” என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மரம் வளர்ப்பதை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். “களம் காப்போம் 96” அமைப்பில் என் நண்பர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் உற்சாகத்துடன் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறீர்கள்.. சிலம்பத்தை எல்லோரும் கற்க அவசியம் என்ன?
நம் பாரம்பரியம் மிக்க கலை. கலைகளில் எல்லாம் தாய் சிலம்ப கலை. எங்கள் தாத்தா.. அப்பால்லாம் சிலம்ப ஆசான்களாக இருந்தார்கள். நீங்கள் சிலம்ப கலையை கற்றால் ஆஸ்பிடலுக்கே போக தேவையில்லை. சிலம்ப கலையை கற்றால் உடல் உறுதியும், மனஉறுதியும் ஏற்படும். முக்கியமாக பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அழிந்து வரும் இக்கலையை காப்பதற்காக இப்பதவிக்கு வந்துள்ளேன். அதுவும் இல்லாமல் சிலம்ப கலை பல இடங்களில் வியாபாரமாக ஆயிருச்சு. சிலம்ப கலையை எல்லோருக்கும் இலவசமாக கொண்டு சேர்க்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். இதற்கு சிலம்ப ஆசான்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். உதாரணத்திற்கு சென்னை வில்லிவாக்கத்தில் திருநகர் பூங்காவில் ஐஎஸ்கே இந்தியா சிலம்ப கூடம் தலைவர் சீனிவாசன் ஆசான். கிட்டத்தட்ட சுமார் 1000 சிலம்ப மாணவர்களை உருவாக்கி உள்ளார். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். அவரை போல் பல சிலம்ப ஆசான்கள் வரணும்.
வடிவேல் பாலாஜி வீட்டிற்கு நேரில் சென்று உதவியதை பற்றி..?
வடிவேல் பாலாஜி பற்றி பேச சொன்னால் நானெல்லாம் பேசி கொண்டே இருப்பேன். நான் எவ்வளவு டென்சனாக இருந்தாலும் வடிவேல் பாலாஜி நிகழ்ச்சியை பார்த்தால் டென்சன் எல்லாம் போயி உற்சாகத்துடன் இருப்பேன். அவரை அவ்வளவு பிடிக்கும்.
நாகேஷ், சந்திரபாபு, வடிவேல் இவர்களை போல் வடிவேல் பாலாஜி மிகப்பெரிய கலைஞன். அவருக்கு அவர் திறமைக்கேற்ற சரியான மரியாதையும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று எனக்கு எப்போதும் வருத்தம் உண்டு. அவர் இறந்ததை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை. அப்புறம் எனது தம்பியும் நடிகரும் ஆன சௌந்தர் மூலம் வடிவேல் பாலாஜி வீட்டிற்கு சென்றேன். வீட்டை பார்த்தவுடன் மிகவும் மனசு உடைஞ்சி போச்சு.. 10க்கு 10 ரூமில்தான் இத்தன காலம் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது என்னால் முடிந்த ஒரு தொகையும், மாதா மாதம் 5000 ரூபாயும் கொடுத்து வருகிறேன். என்னை சிரிக்க வைத்த குடும்பம். அவர்களை சிரிக்க வைக்க முடியுமா தெரியாது.. ஆனால் எந்த தருணத்திலும் அழவிட மாட்டோம். இந்த பேட்டியை பார்த்து வடிவேல் பாலாஜிக்கு குடும்பத்துக்கு உதவினால் மிகவும மகிழ்ச்சி. மிக முக்கியமான விசயம் இதுவரைக்கும் வடிவேல் பாலாஜியை நான் நேரில் சந்தித்தது இல்லை..
அரசியல் பற்றி உங்கள் பார்வை..?
இங்கு நடக்கும் எந்த நிகழ்வும் நீங்கள் உற்று நோக்கினால் அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியலே இருக்கும். இப்போது டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டமானாலும் சரி.. ஸ்டெர்லைட் பிரச்சனையானாலும், எட்டு வழி சாலையானாலும் இப்படி சொல்லி கொண்டே போகலாம். இளைஞர்கள் அரசியலை கவனிக்க தொடங்கி விட்டார்க்ள. புதிய வாக்காளராக பல இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்க போறாங்க.. அவங்க தான் வருங்கால தமிழகத்தில் யாரை முதல் அமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்று முடிவு செய்வாங்க.. எனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களில் எழுச்சி தமிழன் சீமானை பிடிக்கும். அவரின் மண்ணையும், விவசாயத்தையும் காக்கணும் என்ற கட்சியின் கொள்கையின் கோட்பாடுகளிலும் இணைந்து “நாம் தமிழராக” பணியாற்ற விருப்பம் உள்ளது.. கூடிய விரைவில் சீக்கிரம் இணைந்து செயல்படுவோம்.