தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க தொகு திக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் உள் ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொகு திக்கு தலா 3 பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், தலா 1 வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ பார்வையிடல் குழு, கணக்கீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து தேவையின் அடிப்படையில் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தமிழகத்துக்கு தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேலும் 15 கம்பெனி படையினர் வருவார்கள். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 300 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு 160 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்தனர். இந்ததேர்தலுக்கு 330 கம்பெனி படை கோரப்பட்டுள்ளது.
சோதனையில் பிடிபடும் பணம், பொருட்களை எப்படிக் கையாள்வது, எந்த அளவிலான தொகை குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் சுங்கத் துறை, வருமானவரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.
மறைந்த தலைவர்களின் சிலைகள், படங்களை மூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு தொடர்பான அரசாணைகள் வெளியிடுவது குறித்து தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலர், பொதுத்துறை செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் முடிவெடுத்து, ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பின் அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால், நான் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இசைவு பெற்றுத்தருவேன்.
அரசியல் கட்சிகள், பொதுக் கூட்டம், தேர்தல் விளக்க கூட்டம் ஆகியவற்றை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.
தமிழகத்தில் 68 ஆயிரத்து 324 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது கரோனா காரணமாக 1,000 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடி களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பயன் படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்படும்.
இதற்காக அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் நேரில் சென்று தபால் வாக்கு பெற விருப்பமா என்பதை அறிந்து, அவ்வாறு விரும்பினால், அவர் களுக்கு 12டி படிவம் வழங்கப் படும். அவர்கள் பெயர் வாக் காளர் பட்டியலில் குறித்துக் கொள்ளப்படும். அவர்களுக்கு கையில் மை அடையாளம் வைக்கப்படாது. ஆனால், தபால் வாக்கு வசதி கோரி விட்டு பின்னர் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது. தபால் வாக்கு அளிப்பது குறித்து தேர்தல் அறிவிக்கை வெளியாகும் மார்ச் 12-ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.