மாணவப்பருவம் என்பது மகாத்தான பருவம் காரணம் இந்த பருவம்தான்ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக அமைகிறது.
இந்த மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும், நல்ல நண்பர்களோடு மட்டுமே சேரும், நல்லோரிடம் மட்டுமே நல்ல உறவை தொடரும் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள், நல்ல நிலைமைக்கு வருகிறார்கள், அவரவருக்கு பிடித்த துறைகளில் சாதிக்கிறார்கள், சரித்திரத்தை படைக்கிறார்கள், தீய பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைகிறார்கள், கூடா நட்பால் கேடாய் முடியும் என்பதை மனதார உணர மறுக்கிறார்கள்.
அதைத்தான் நமது தமிழ்பாட்டியான ஔவையார் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்..
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே –
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று
என்கிறார்…
சுருக்கமாக சொல்லப்போனால் நல்ல பழக்க வழக்கத்தை கடைபிடிக்கும் மாணவர்களின் வாழ்க்கையானது இந்த உலகமே கண்டு வியக்கும் ஆச்சர்ய குறியாகிறது.!!!
கண்மூடித்தனமாக தீய பழக்க வழக்கத்தை மேற்கொள்ளும், பிஞ்சிலே பழுக்கும், கூடா நட்பை உடும்பு போல பற்றிக்கொள்ளும், பெரியோர்களின் அறிவுரைகளை ஆலோசனைகளை உதாசீனப்படுத்தும் மாணவர்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகிறது.
மேலும் கிரேக்க தத்துவமேதை சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.
”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.
”கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”
”ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ். அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான். மேற்காணும் மாணவனைப்போல இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நல்ல மாணவனாக உருவாகி பிறந்த ஊருக்கும், ஈன்றெடுத்து வளர்த்த பெற்றோருக்கும் நற்பெயரையும் புகழையும் சேர்க்க வேண்டும், நமது நாட்டு பெருமை தேடித்தர வேண்டும்.
அதற்கு நீங்கள் அய்யன் திருவள்ளுவர் கூறியது போது
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிற தாரக மந்திரத்தை மனதில் பதித்து இலட்சிய தாகம் தணியும் வரை இறுதிவரை உறுதியாக தேனிபோல கடுமையாக உழைக்க வேண்டும்.
சினிமா பாடலாசிரியர் மருதகாசி அய்யா அவர்கள் எழுதிய பாடல் வரிகளைப்போல நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும், நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்கணும் என்கிற உன்னத நோக்கத்தில் என்னை ஊக்குவிக்கும் ஆளுமைச் சிற்பி ஆசிரியர் திரு.ஞானசேகர் அய்யாவுக்கு ஞானசித்தனின் நெஞ்சார்ந்த நன்றிகள்..