முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரளித்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சாதாரண பெண் காவலர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகாரையடுத்து ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
விசாரணைக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், ‘ராஜேஷ் தாஸ் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் சீண்டல் நடைபெற்றுள்ள விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் காவல்துறையிலுள்ள சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது. பெண் அதிகாரி புகாரளித்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
பெண் அதிகாரிக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பாகக் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.