ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம் என்றார் சகாயம்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சகாயம் அணி 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2015ம் ஆண்டு நான் அரசியலுக்கு வர வேண்டும் என ஏராளமான இளைஞர்கள் பேரணியை நடத்தினார்கள். அவர்களிடம் நான் சொன்னது என்னவென்றால், தற்போது செய்ய வேண்டியது அரசியல் அல்ல, முதலில் நாம் சமூகத்தை மாற்ற வேண்டும் என கூறினேன்.
இந்நிலையில் என் விருப்ப ஓய்வு சமீபத்தில் பெற்றுக்கொண்டேன். எனவே தேர்தல் அரசியல் தாண்டி ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம். வளங்களை பெரும் வணிக சக்திகள் பறித்து செல்வதை, இந்த மண்ணை உளமார நேசிக்கும் நாம் தடுக்க வேண்டும்.நான் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளேன். குறுகிய கால அவகாசம் இருக்கும் நிலையில், புதிய அரசியல் கட்சி துவங்க முடியவில்லை. எனவே குறிப்பிட்ட தொகுதிகளை ‘சகாயம் குழு’ தேர்தல் களம் காணும்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி’, ‘வளமான தமிழகம் கட்சி’ என்ற இரண்டு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட இருக்கிறோம். வெறுப்பு அரசியலை முற்றிலும் நாங்கள் நிராகரித்து தேர்தலை சந்திக்கின்றோம். மதச்சார்பின்மை, நேர்மை என்ற கொள்கையை முன் நிறுத்தி தேர்தல் களம் காண்போம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழக்கமிடுவோம். 1000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் நேர்மைக்கு பெயர் போனவர்கள் எனவே அதனை மீட்டு உருவாக்கம் செய்ய வேண்டும். நேர்மை அறம் என்பது தனிப்பட்ட பண்பு அல்ல. அதனை நாம் ஒன்றிணைந்து செயல்படுத்துவோம். அதன்படி, 36 இடங்களில் போட்டியிட இருக்கிறோம்.” இவ்வாறு சகாயம் தெரிவித்துள்ளார்.